சிங்கப்பூர் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கை வருகையை முன்னிட்டு அவருக்கு இன்று மதிய உணவு விருந்துபசரிப்பு வழங்கி கௌரவித்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் (படம்) அந்த விருந்தில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக உழைத்த இந்திய சமுதாயத்தினரை நினைவு கூர்ந்தார்.
குறிப்பாக தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பங்களிப்பை தனித்துவம் மிக்கதாக லீ சியன் லுங் பாராட்டினார்.
சிங்கை இந்தியர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் 1924ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆவார். ‘தமிழ் முரசு’ என்ற தமிழ் நாளிதழை மலேசியாவிலும், சிங்கையிலும் வெற்றிகரமாக நடத்தியவர் சாரங்கபாணி.
பின்னர் தமிழ் முரசு மலேசியாவில் நிறுத்தப்பட்டாலும், சிங்கையில் இன்றுவரை ஒரே தமிழ் நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.
“தமிழ் முரசு செய்தித்தாளை உருவாக்கிய ஜி.சாரங்கபாணி, ஏழை எளியோரும் படிக்க வேண்டும் என்பதற்காக 1 காசுக்கு அதனை விற்றார்” என புகழாரம் சூட்டினார் சிங்கைப் பிரதமர்.
“அவரைப் போன்ற தலைவர்களால்தான் சிங்கப்பூரில் இந்தியர்கள் சமூகத்தோடு வெற்றிகரமாக ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்” என்றும் லீ சியன் லுங் கூறியிருக்கின்றார்.
கோ.சாரங்கபாணியின் தமிழ்ப் பணியோடு, மலேசியாவில் தமிழ் இளைஞர் மணிமன்றங்கள் உருவாவதற்கும் பாடுபட்டவர் கோ.சாரங்கபாணியாவார்.
அதே வேளையில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள், நாடெங்கிலும் கொண்டாடப்படுவதற்கும் அதன்வழி தமிழ் மொழியும், தமிழ்க் கலாச்சாரமும் வளர்வதற்கும் வித்திட்டவர்களில் கோ.சாரங்கபாணி ஒரு முன்னோடியாவார்.