மும்பை – பாலிவுட் நடிகர் அமீர்கான், மதசகிப்புத்தன்மையின்மை குறித்து கூறியுள்ள கருத்து நாடெங்கிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் கூட கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
அமீர்கானின் இந்த கருத்துக்கு பாஜக-வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மனோஜ் திவாரி கூறுகையில், “அமீர்கான் தேசத்தின் பெருமைக்கு களங்கம் கற்பித்து விட்டார். ஒரு சில சம்பவங்களை வைத்து நாட்டின் சகிப்புத்தன்மையை விமர்சிப்பது தவறு” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாலிவுட்டின் மூத்த நடிகர் அனுபம் கெர் கூறுகையில், ”மதசகிப்பு கொண்ட மக்கள் நிறைந்த இந்தியாவில்தான் உங்களை போன்றவர்கள் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுக்க முடியும். உங்களை உருவாக்கி அடையாளம் அளித்தது இந்த தேசம்தான். நீங்கள் கிரணிடம் கேளுங்கள், எந்த நாட்டிற்கு போகவேண்டுமென்று” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேவேளையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமீர்கானின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அமீர்கானின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.