கோலாலம்பூர் – எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இந்த முறை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த அம்னோ கூட்டங்களைக் காட்டிலும் இம்முறை வித்தியாசமாக சில மூடி மறைப்பு வேலைகள் நடப்பதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “வெளிப்படைத் தன்மை மிகக் குறைவாக இருப்பதை எண்ணி வருந்துகின்றேன். அது தான் அம்னோ கூட்டத்தில் மிகவும் வேடிக்கையான விசயம்.”
“மக்கள் வருவார்கள் (அம்னோ), புதிய திட்டங்களை உருவாக்குவார்கள், தேசத்திற்காக பலவற்றை அவர்கள் செய்வதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது” என இன்று ஷா ஆலமில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் அம்னோ கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி மகாதீருக்கு அழைப்பு விடுவோம் என அம்னோ உதவித்தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளது குறித்து கேட்டதற்குப் பதிலளித்துள்ள மகாதீர், “எனக்கு அழைப்பு அனுப்பத் தேவையில்லை. நான் வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.