கோலாலம்பூர் – ஏர் ஆசியா விமானிகளுக்கு திடீர் உடல்நலக் கோளாறு என்று கூறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் இன்று 100-க் கணக்கான பயணிகள் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில விமானங்கள் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற விமானங்கள் புறப்படுவதற்குக் கால தாமதம் ஏற்பட்டு இரவு முழுவதும் பயணிகள் விமான நிலையத்தில் காத்துக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில், மிகவும் தாமதமான விமானங்கள் என்றால் அது உள்ளூர் பயணம் மேற்கொள்ளும் விமானங்கள் தான். அனைத்துலக விமானங்கள் பல திடீரென இரத்து செய்யப்பட்டுவிட்டன என்று கூறப்படுகின்றது.
இது குறித்து ஏர் ஆசிய தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், கிட்டத்தட்ட 12 விமானிகளுக்கு காய்ச்சல் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஆசியா QZ8501 விமானம் விபத்திற்குள்ளாகி, அதில் இருந்த 162 பேர் பலியானதற்குக் காரணம், விமானத்தில் இருந்த பழுதான பாகமும், அதை இயக்கிய பணியாளர்களும் தான் காரணம் என இந்தோனேசியா நேற்று அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று நிகழ்ந்துள்ள இந்த திடீர் தாமதங்களும், குழப்பங்களும் அனைவரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காரணம், உண்மையில் விமானிகளுக்கு உடல்நலக்குறைவா? அல்லது ஏர் ஆசியா QZ8501 விமானத்தில் இருந்த பழுதான பாகம் போன்று மற்ற விமானங்களிலும் உள்ளனவா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
எனினும், முழு விசாரணைக்குப் பின்னரே, இன்று ஏர் ஆசியா விமானங்களின் தாமதமும், சேவை இரத்து செய்யப்பட்டதற்கான காரணமும் தெரியவரும்.