Home Featured தமிழ் நாடு இனியும் வேண்டுமா ஆட்சிக்கொரு இலவச அறிவிப்பு?

இனியும் வேண்டுமா ஆட்சிக்கொரு இலவச அறிவிப்பு?

489
0
SHARE
Ad

arti5சென்னை – சென்னை வருடாவருடம் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை ஈட்டித் தரும் தலைநகரம். இது அரசியலுக்கு மட்டுமல்ல வர்த்தகத்திற்கும் தலைநகரம் தான்.

வரலாறு காணாத மழை, தேசிய பேரிடர், இயற்கைச் சீற்றம் என பல்வேறு பெயர்களில், காரணங்களைக் கூறி, நடந்த தவறுகளை மூடி மறைக்கப் பார்த்தாலும், இயற்கையிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது என்பதற்கு சென்னை தான் முக்கிய சாட்சி.

ஆட்சிக்கு ஒரு தேர்தல் வாக்குறுதி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு இலவச அறிவிப்பு என திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த தமிழகம், இன்று சந்தித்துள்ள நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல வாக்காளர்களும் முக்கியக் காரணம் தான்.

#TamilSchoolmychoice

சென்னை வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கும் போதும் ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிப் பயனில்லை, அடுத்து நடக்க வேண்டியவற்றை எதிர்நோக்குவோம் என்று நாமும் கூறிக் கொண்டு ஒதுங்கி விட முடியாது. நோயுற்ற போது மருந்தை, ஊசி வழியாக உடலுக்குள் செலுத்துவதும் மரபு தான். அத்தகைய ஊசி தான் இந்தக் கட்டுரையும்.

arti4சென்னையில் வெள்ள பாதிப்பிற்கு அதிகம் ஆளானது புறநகர் பகுதியில் இருக்கும் மக்கள் தான். அங்கு ஒவ்வொரு தெருக்களிலும் 20 முதல் 30 அடி வரை தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், மக்கள் படகுகள் மூலம் மட்டுமே மீட்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான காரணம் குறித்து தற்போது அதிகம் பேசப்படுவது என்னவென்றால், பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அனைத்துமே ஒரு காலத்தில் நீர்நிலைகள் என்பது தான். கடந்த சில வருடங்களாகவே கட்டப்படும் அத்தகைய குடியிருப்புப் பகுதிகள், அரசு அனுமதியின்றி கட்டி இருக்க முடியாது என்று தனியாகக் கூறத் தேவையில்லை..

நகரமயமாதல், வேலை தேடி நாளுக்கு நாள் சென்னை வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அத்தகைய குடியிருப்புப் பகுதிகளை தவிர்க்க முடியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது.

புதிதாக வேலை தேடுவோராக இருந்தாலும் சரி, படித்து பட்டம் பெற்ற இளைஞர்களாக இருந்தாலும் சரி சென்னை மட்டுமே தஞ்சம் அளிக்கும் இடம் என்ற மனோபாவத்தை வளரவிட்டது யார் தவறு?   மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி என பன்முக நகரங்கள் இருந்தும், சென்னைக்கு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, அங்கு மட்டுமே பிழைக்க முடியும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது யார்?

சென்னையில் நேற்று மட்டும் 80 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேறி உள்ளதாக செய்திகள்arti1 வெளியாகி உள்ளன. ஆனால், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சுமார் 2000 குளங்களில் 150 மட்டுமே நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒருபுறம் அதீத வெள்ளம், மறுபுறம் வறட்சி என அளிப்பது இயற்கையின் பாரபட்சமாக இருந்தாலும், நீர் மேலாண்மை மூலம் அதனை சரி செய்ய முடியும். ஆட்சிகள் மாறினாலும் நதிநீர் இணைப்பும், நீர்நிலைகளை தூர்வாருதலும் வெறும் வாய்மொழியாகவே இருக்கிறது.

முன்னோர்களின் மதிநுட்பத்தால், தமிழகத்தில் அணைகள், நதிகள், கண்மாய் போன்ற நீர்நிலைகள் எல்லாம் சங்கிலித் தொடர் அமைப்பால் பிணைக்கப்பட்டவை. ஆனால், அந்த அமைப்பே தற்போது சீர்குலைந்து வருகிறது.

இயற்கையை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரிக்கை இருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தவில்லை என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு மட்டுமல்ல பொதுப் பார்வையாளர்களின் குற்றச்சாட்டும் தான். இதற்கு அரசு கூறும் பதில் தான் என்ன?

arti3இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் சாமானியர்கள் மத்தியிலும், அதற்கான ஆயிரம் ஆயிரம் பதில்கள் ஆட்சியாளர்கள் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் இவை அனைத்தும் தேர்தல் சமயத்தில் கானல் நீராக மறைந்து போவதற்கு முக்கிய காரணம் அரசியல் விளையாட்டு தான்.

அவசியான சாலை கட்டமைப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளாமல், இலவச தொலைக்காட்சிக்காகவும், அரவை இயந்திரத்திற்காகவும் வாக்குகளை இழந்துவிடும் வரை, இயற்கையின் விளையாட்டு தொடரத்தான் செய்யும். ‘உதவி செய்யுங்கள்’ என்ற கூக்குரல்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கத்தான் செய்யும்.

– சுரேஷ்