கோலாலம்பபூர் – மலேசிய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, நன்கொடை அளித்தவர் யார்? என்பதை தற்போதைக்கு வெளிப்படுத்த இயலாது என்று நாடாளுமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடப்பு விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு அறிக்கையையும் இது தொடர்பாக வெளியிடக்கூடாது என சட்டத்துறை ஆலோசனை கூறியிருப்பதாக நஜிப் சார்பில் அவரது அறிக்கையை துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார்.
“எனினும், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் அந்த நன்கொடை அளித்தவரின் விவரத்தை அறிந்து கொண்டது என்பதை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பது எங்கள் கடமை மற்றும் அந்த வங்கிக் கணக்கை திறப்பது குறித்தும் பேங்க் நெகாராவிற்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் அரசியல் நன்கொடைகளை பொதுவில் அறிவிக்க வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இந்த நாட்டில் இல்லை என்று தனது அறிக்கையில் கூறியுள்ள நஜிப் அது ஒரு புதிய பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.