வாஷிங்டன் – சென்னை, வெள்ளப் பேரிடரில் சிக்கி உள்ள நிலையில், தேவையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர்(படம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. தமிழ்நாடு, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ள சேதத்தை எதிர்கொண்டு உள்ளது.”
“வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெள்ளத்தால் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களை பற்றியே எங்களது சிந்தனை உள்ளது. இந்த கடினமான நேரத்தில் உதவி அளிப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம். உதவி கேட்டு இந்தியாவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை.”
“தங்களுக்கு ஏற்பட்ட அவசர கால நெருக்கடிகளை சமாளித்துக்கொள்ளக்கூடிய அளவில் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. எனினும், நாங்களும் அதற்கு தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதய நிலையில் சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.