புது டில்லி, மார்ச்.13- இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியிருப்பது மிக மோசமான முடிவு என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் இத்தாலி வீரர்களை திரும்பி அனுப்ப முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் இத்தாலி அரசின் செயல் மத்திய அரசை கவலையடையச் செய்துவிட்டது.
இத்தாலி நிச்சயமாக அது சொன்ன வார்த்தையை நிறைவேற்றியே ஆக வேண்டும். தவறினால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும்.
இது குறித்து இத்தாலி தூதரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.