சென்னை – தமிழக மக்களை மழை ஒருபுறம் தொடர்ந்து பெய்து விரக்தி அடைய வைத்தால், மறுபுறம் அரசியல்வாதிகள் இது தான் சமயம் என்று மலிவு அரசியல் செய்து, மக்களை வெறுப்பின் உச்சத்திற்கு ஆட்படுத்துகின்றனர். சமீபத்தில் பேஸ்புக்கில் படித்த பதிவுகளில் வலி நிறைந்த ஒன்று, “கடந்த சில வருடங்களில் மக்களின் வலியை புரிந்து கொள்ளக் கூடிய, ஒரு தலைவன் கூட உருவாகவில்லை” என்பது தான்.
இந்த வாசகத்தை படித்த பொழுது, போகிற போக்கில் பதிவு செய்தது போன்று தோன்றவில்லை. மாறி மாறி வாக்களித்து, வாக்களித்து விரல் தேய்ந்து ஏமாந்து போன நெஞ்சங்களில் ஒன்றாகவே தோன்றுகிறது. கடுமையான மழை, வெள்ளமானது. வெள்ளம் பிற்பாடு பேரிடர் ஆனது. ஆனால், தலைவர்களின் அரசியலில் மட்டும் எந்தவொரு மாற்றமும் இல்லை.
மக்களுக்கு வழங்க இருக்கும் நிவாரணப் பொருட்களில் ‘அம்மா’-ன் படத்தை ஒட்ட வேண்டும். மக்களை சுமக்கும் ஆம்புலன்சில் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்ட வேண்டும் என ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக புகார் வந்து கொண்டிருக்க, அதைப் பயன்படுத்தி, வெறுப்பு அரசியலை மக்களிடையே திணிக்க வேண்டும் என பல அரசியல் தலைவர்களும் அதனை ஊதி, பூதாகரமாக்கி வருகின்றனர்.
தங்கள் மேல் அக்கறை உள்ள நிஜ மனிதர்களை மக்களால் மிக எளிதாக இந்த தருணத்தில் அடையாளம் காண முடிகிறது. சென்னையில் தற்போதய சூழலில், அங்கு பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு உடனடி உதவி கிடைப்பதற்கு காரணம், மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி தான். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி தான். நட்பு ஊடகங்கள் பெரும்பாலும், வீணான அரட்டைகளுக்கே பயன்படுகின்றன என்ற விமர்சனம் தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் பங்கு மிக முக்கியமானது.
அரசியல்வாதிகளும், பொதுநல நோக்கர்களும், இன்ன பிற நடிகர்களும் நிவாரண உதவிகளை ஆரம்பிக்கும் முன்னரே, அவர்கள் பெரும்பகுதியைத் தொடங்கிவிட்டனர். டுவிட்டர் வாயிலாக அவர்கள் உருவாக்கிய டேக் மூலம், இளைஞர்களை இணைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி ஒருபுறம், ‘நமக்கு நாமே’ என மக்கள் செயல்பட்டு கொண்டிருக்க, வழக்கம்போல் மக்களுக்கு ‘ஆதரவாளனாக’ பல்வேறு தலைவர்களும் புகைப்படங்களுக்கு காட்சி தர தொடங்கிவிட்டனர். இதற்கிடையே ஆளும், எதிர்கட்சிகளின் தனிப்பட்ட விமர்சனங்கள் வேறு.
நிஜத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒவ்வொரு கட்சியும் எத்தனை கோடிகளை செலவு செய்கின்றன, தேர்தலின் போது விளம்பரங்களுக்கும், கூட்டம் கூட்டுவதற்கும் எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகின்றன என்பது சாதாரண மக்களுக்கும் புரியும். அவற்றில் பாதியாவது, அரசியல் கட்சிகள் நிவாரண நிதியாக வழங்கி உள்ளனவா?
வெள்ளம் குறித்த புகார்களை கூறுவதற்காக மட்டும் ஊடகங்களை சந்திக்கும் அரசியல்வாதிகள், எத்தனை பேர் தங்கள் இல்லங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் அளித்தனர்? என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஒரு தலைவர் வெளியே செல்கிறார் என்றால் குறைந்தது 10 வாகனங்களாவது பின்தொடரும். அதில் எத்தனை மக்களை மீட்க பயன்பட்டது? தமிழர்கள் அதிகம் உள்ள வெளிநாடுகளில் கூட அந்நாட்டு ஊடகங்கள், சென்னை வெள்ளம் குறித்து அதிக அக்கறை காட்டும் போது, வட இந்திய ஊடகங்கள் மெத்தனமாக இருந்ததை இங்கிருக்கும் அரசியல்வாதிகள் ஏன் ஒன்று கூடி தட்டிக் கேட்கவில்லை?
நாட்டு நலன் கருதி மோடியும், சோனியாவும் ஒன்று கூடி பல்வேறு ஆலோசனைகள் நடத்தும் போது, ஏன் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் அதனை செய்ய தயங்குகின்றனர்?
இப்படி ரணமாக வலித்துக் கொண்டிருக்கும் ஆயிரம் கேள்விகள் மனதில் இருக்க, ஆளும் கட்சி சரியாக நிவாரண உதவி வழங்கவில்லை என எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகள் மலிவு அரசியல் செய்கின்றன என ஆளும் கட்சியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை கேட்பதற்கு தமிழக மக்கள் தயாரில்லை என்று கூறுவதை விட, தெம்பில்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
– சுரேஷ்