Home Featured தமிழ் நாடு பிரபல எழுத்தாளரின் ஈமச்சடங்கு உணர்த்தும் சென்னையின் அவலநிலை!

பிரபல எழுத்தாளரின் ஈமச்சடங்கு உணர்த்தும் சென்னையின் அவலநிலை!

607
0
SHARE
Ad

vikiசென்னை – வரலாற்று நாவல் படைப்பாளரும், அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் மரணமும், அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரது உடலுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கிற்காக சந்தித்த துயரமும் சென்னை மக்களின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

கடந்த 1-ம் தேதி விக்கிரமன், சென்னை மாம்பலத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். விக்கிரமன் இறந்த தருணத்தில் சென்னை, வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் ஸ்தம்பித்து போய் இருந்தது. அந்த சமயத்தில், அவரது உடலை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட பெட்டி (Freezer Box) கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, நான்கு நாட்கள் கழித்தே, அவரது உடல் எரியூட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தனது தந்தையின் உடலை பாதுகாக்க முடியாமல், தாங்கள் அடைந்த இன்னல்கள் குறித்து, அவரது மகன் கண்ணன் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது சகோதர-சகோதரிகள் வரும் வரை தனது தந்தையின் உடலை பாதுகாக்க, பிரீசர் பாக்சுக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்ததாக தெரிவித்துள்ள அவர், 2-ம் தேதிக்கு பிறகு எந்த செல்பேசிகளும் இயங்காததால், யாரையும் உதவிக்காக கூட அழைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

“கழுத்தளவு தண்ணீரில் எங்கு உடலை கொண்டு போக முடியும்? திருவான்மியூர், கண்ணம்மாபேட்டை, கிருஷ்ணாம்பேட்டை மின் மயானங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் என்ன செய்யவென்றே தெரியவில்லை.”

“இதற்கிடையே மயானம் கிடைக்கும் வரை, உடலை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க முடிவு செய்தோம். தந்தையின் உடலை படகில் வைத்து எடுத்து சென்றோம். ஆனால் இறந்து போய் 2 நாட்கள் ஆகி விட்டதால், எந்த மருத்துவமனையும் உதவி செய்ய முன் வரவில்லை. அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கடிதம் வாங்கி வாருங்கள் என்றனர். அத்துடன் உடலை வைக்க வேண்டுமென்றால், போஸ்ட் மார்ட்டம் செய்துதான் வைப்போம் என்றும் கூற எங்களுக்கோ ஒரே அதிர்ச்சி.”

“ஒரு வழியாக போஸ்ட் மார்ட்டத்துக்கும் சம்மதித்து விட்டோம். ஆனால் காவல் நிலையத்திலோ கடிதம் தர மறுத்து விட்டனர். பின்னர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்ம் செய்து உடலைபாதுகாக்க முன்வந்தனர். பின்னர் 4-ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணாம்பேட்டை மயானத்துக்கு கொண்டு சென்று பயோகேஸ் முறையில் தந்தையின் உடலை எரியூட்டினோம்” என்று அவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரபல எழுத்தாளரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, கடந்த சில நாட்களில் சென்னையில் பலரும் இத்தகைய இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.