சென்னை – சென்னை, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு சாராத பல்வேறு தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சில பகுதிகளில் அதிமுக கட்சியினர் என்ற பெயரில் பலர் பொருட்களை பிடிங்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிமுகவினர் யாரெனும் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த கீழ்த்தரமான செயல்கள் தொடர்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அப்படி சமீபத்தில் வாட்சாப்பில் வெளியாகி உள்ள காணொளி ஒன்றில், தன்னார்வலர் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அளிக்க 5000 உணவுப் பொட்டலங்களுடன் வந்துள்ளார். அவரை வழிமறிக்கும் சிலர், தங்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் வேண்டும் என விவாதம் செய்கின்றனர்.
மேலும் அவர்கள் தங்களை மன்ற உறுப்பினரின் (கவுன்சிலர்) உறவினர் என்ற போர்வையில் மிரட்டும் தொனியிலும் பேசுகின்றனர். எனினும், அவர்கள் அதிமுகவினரா? அல்லது சமூக விரோத கும்பலா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக நட்பு ஊடகங்களில் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கக்கூடிய வகையில் பிரத்யேக தொலைபேசி எண்கள் (044-28130787, 044-28132266, 044-28133510) அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தக் காணொளியை கீழ்காணும் பேஸ்புக் இணைப்பின் வழியாகக் காணலாம்:-
https://www.facebook.com/JoyMusicHD/videos/738880906246740/