கடலூர் – தமிழகத்தில் வெள்ளப் பேரிடர், சென்னை மட்டுமல்லாது கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட சில பகுதிகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு மட்டுமல்லாது பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலமாகவும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சமீபத்தில் வெளியான பேஸ்புக் பதிவு ஒன்றில், குறிப்பிட்ட பகுதி ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஒன்றில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் நூற்றுக்கும் மேற்பட்டோர், சூறையாடி எடுத்துச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. நிவாரண பொருட்களுடன் சென்ற வாகனம் தடுத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டதாகவே தோன்றுகிறது. பலர் அடிப்படை உதவிகளுக்காக காத்திருக்க, நிவாரண பொருட்கள் உள்ள வாகனம் சூறையாடப்பட்டு இருப்பது தன்னார்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிலர் குறிப்பிட்ட அந்த பகுதியை கடலூர் கிராமப் பகுதி என்று குறிப்பிடுகின்றனர். எனினும், உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நடிகர் சித்தார்த் உள்ளிட்ட சிலரும், கடலூர் நெடுஞ்சாலை பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் உள்ள வாகனத்தை சமூக விரோதிகள், வழி மறித்து கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/suba.haran.7/videos/1705782389658012/