Home Featured நாடு அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு – 2)

789
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர்: இன்று காலை பரபரப்புடன் தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது பாகம்:

  • ஒரு தலைமைத்துவத்தின் மீது விசுவாசமும், நம்பிக்கையும் வைக்க வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. நஜிப் ரசாக் ஆகிய நான் அரசியல்வாதியாகவும், அரசாங்கத்தில் ஓர் உறுப்பினராகவும் ஆனது முதல் எப்போதுமே எதிர்ப்பு அரசியல் நடத்தியவனில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எந்தத் தலைவரையும் நான் கவிழ்த்ததுமில்லை. அப்படியிருப்பவன் எப்படி நாம் நேசிக்கும் அம்னோவைக் கவிழ்ப்பேன்?
  • அதே போல, 1987ஆம் ஆண்டில், அம்னோவில் மிகப் பிரச்சினையான காலகட்டத்தில் நான் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமட் அம்னோ தலைவராகவும், பிரதமராகவும் பதவியில் தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்தேன்.
  • (அம்னோ அமைப்பு சாசனத்தைக் கையில் தூக்கிப் பிடித்தபடி) இந்த அம்னோ அமைப்பு சாசன விதி என்ன கூறுகிறது என்றால், அம்னோவின் துணைத் தலைவர் என்பவர் கட்சியின் தேசியத் தலைவரின் பணிகளில் அவருக்குத் துணையாக இருக்கவேண்டும் எனக் கூறுகின்றது. அதேபோல, தேசிய உதவித் தலைவர்களாக இருப்பவர்களின் பணிகள் என்னவென்றால், தேசியத் தலைவருக்கான பணிகளை நிறைவேற்றுவதில் அவருக்குத் துணை நிற்பதுதான் என்றும் கூறுகின்றது. உறுப்பினர்களின் கடமையும் அதுதான். அதே சமயம் குறைகூறல்கள் இருப்பின், அவற்றை சரியான வழிமுறைகளில் மேற்கொள்ள வேண்டும்.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பின் முழுப் பயனை இன்னும் பொதுமக்கள் அனுபவிக்கவில்லை. இந்தத் திட்டம் அமுலாக்கப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனப்படும் என்பதோடு, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்படும். ஆனால், அதே சமயம் இது மக்களிடையே வரவேற்பைப் பெறக் கூடிய திட்டமல்ல என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் இது சரியானத் திட்டம் என்பதோடு இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம், மக்களுக்காகச் செலவிடப்படும்.
  • டிபிபிஏ எனப்படும் டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தத்தின் மூலம் பூமிபுத்ரா உரிமைகள் எதனையும் நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, இந்த டிபிபிஏ ஒப்பந்தம் நமது நாட்டுக் கொள்கையான பூமிபுத்ரா கொள்கையை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் நமது பூமிபுத்ரா கொள்கை உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அம்னோவின் அரசியல் பணிகளால் மலாய் சமூகத்தின் அமைப்பே மாற்றப்பட்டிருக்கின்றது. ஒரு தலைமுறையில், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், இரப்பர் மரம் வெட்டும் தொழிலாளிகளின் பிள்ளைகளும் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் ஆகியுள்ளனர். ஒரு மீனவரின் மகன் மாநில மந்திரிபெசாராக ஆகியுள்ளார் (பேராக் மந்திரிபுசார் சாம்ரி அப்துல் காடிர்). ஆனால் ஆள்தான் பார்க்கக் கொஞ்சம் கறுப்பாக இருப்பார் (சாம்ரியைப் பார்த்து சிரிப்புடன்).
  • நான் அம்னோவில் இணைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஒருமுறை கூட நான் அம்னோவை விட்டு எதற்காகவும் விலகி நின்றதில்லை. பூகிஸ் இனத்தவர்களின் (நஜிப்பின் பூர்வீகம் இந்த இனம்தான்) பழமொழி ஒன்றின்படி நான் சாகும்வரை, அம்னோவின் தலைவராகவும், மலாய்க்கார இனத்தின் மேம்பாட்டுக்காகவும், பூமிபுத்ராக்களின் நலன்களுக்காகவும் இறுதி வரை நின்று போராடுவேன்.
  • ஒருசிலர் நமது போராட்டத்தின் பாதையில் குழிகளைப் பறித்து வைக்கின்றனர். எனது தலைமைத்துவத்திற்கு எதிராக குழி பறிக்கிறேன் என்று அவர்கள் உண்மையில் மலாய் இனத்தின் வளர்ச்சிக்கு – அம்னோவின் போராட்டத்திற்கு குறிபறிக்கின்றனர்.
  • ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் – “நீங்கள் அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்தால் இறுதியில் ஒருவரைக் கூடத் திருப்திப்படுத்த முடியாது” (If you try to please every one, in the end you will not be able to please anyone). அதற்கேற்ப, நான் எனது தலைமைத்துவத்தில் சில கடுமையான முடிவுகளை, அனைவரையும் திருப்திப்படுத்த முடியாத முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அதில் ஒன்றுதான் அமைச்சரவை மாற்றம். அமைச்சரவையில் விசுவாசத்திற்கு முதலிடம் தரும், நாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு கூட்டாக பொறுப்பேற்றுக் கடமையாற்றும் அமைச்சர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அமைச்சரவையை நான் மாற்றியமைத்தேன்.

-செல்லியல் தொகுப்பு

மேலும் படிக்க: