சென்னை நந்தம்பாக்கம், போரூர் – மவுன்ட் பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மையத்தில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இந்த மையத்தையும் விட்டு வைக்கவில்லை.
செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து, மணப்பாக்கம், ராமாபுரம் கால்வாய்கள் வழியாக சீறிப்பாய்ந்த வெள்ளம், டிஎல்எப் வளாகத்தின் பூமிக்கடியில் உள்ள மூன்று தளங்களை மூழ்கடித்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், ஊழியர்களின் 600 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, டிஎல்எப் வளாகத்திற்குள் வெளியாட்களுக்கு கடந்த சில நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
அங்கு வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 20 பேர் பலியானதாகவும், அவர்களின் சடலங்களை இரவோடு இரவாக, அந்த நிறுவனம் வெளியேற்றிவிட்டதாகவும் நட்பு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை டிஎல்எப் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆனால் இந்த செய்தி பற்றி, உண்மைத்தன்மை வெளிவராத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.