கோலாலம்பூர் – நண்பனின் தூரோகத்தை முன்னிறுத்தியே மொத்த படமும் நகர்கின்றது. இரண்டு ஜென்மங்களாக தொடர்ந்து வரும் அந்த துரோகத்திற்கு நிகழ் காலத்தில் எப்படி கணக்குத் தீர்க்கப்படுகின்றது என்பதே படத்தின் கதை.
18-ம் நூற்றாண்டில் அரச காலத்தில் தொடங்கும் படம், நிகழ்காலத்திற்கு வந்து, பின்னர் முந்தைய ஜென்மத்திற்கு சென்று பின்னர் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்து… என்ன? சொல்லும் போதே லேசான தலைசுற்றுகிறதா? ஆம்.. படத்தின் திரைக்கதையை அப்படி தான் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல் பெருமாள்.
என்றாலும், படத்தில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸ்யங்கள் தான் கடைசி வரை படம் பார்ப்பவர்களை இருக்கையில் அமர வைக்கின்றது.
நடிப்பு
பாபி சிம்ஹா.. நிகழ்காலக் கதையில் அவரது தோற்றம் மீசையும், தாடியும் இன்றி பார்ப்பதற்கு அவ்வளவு எடுப்பாக இல்லை. படம் தொடங்கியது முதல் இடைவேளைக்கு சற்று முன்னர் வரை, கதை ஜவ்வாக இழுப்பதாலோ என்னவோ அவரது கதாப்பாத்திரம் மனதில் நிற்கவே இல்லை.
ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் கேரளாவில் நடப்பதாகக் காட்டப்படும் முன் ஜென்மக் கதையில், ‘செழியன்’ கதாப்பாத்திரத்தில் மொத்தமாக ஈர்த்துவிடுகின்றார்.
அதிலும், வெள்ளைக்கார துரையுடன் சதுரங்கம் விளையாடும் காட்சியிலும், அதன் பின்னர் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் செழியன் கதாப்பாத்திரத்தின் துணிச்சலும், கொள்கைகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றன.
அடுத்ததாக, கதையின் முக்கியக் கதாப்பாத்திரத்தில், ‘மெட்ராஸ்’கலையரசன் நடித்திருக்கிறார். மூன்று ஜென்மங்களிலும் பாபி சிம்ஹாவிற்கு அவர் தான் நண்பனும், எதிரியும். நிகழ்காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஜான் கதாப்பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கலையரசன் ஈர்க்கவில்லை. கலையரசனின் முகவெட்டிற்கும், அவரது குரலுக்கும், உடல்மொழிகளுக்கும் அந்த கனமான பாத்திரம் பொருந்தவில்லை என்று தோன்றுகின்றது.
கதாநாயகியாக ரேஷ்மி மேனன் ஒப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு பாடலோடு அவரை படத்தில் காட்டவே இல்லை.
ஆனால், பாபி சிம்ஹாவுக்கு இணையாக படத்தில் நம்மை ஈர்ப்பது அப்புக்குட்டி தான்… மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரர்களுக்கு எதிராக அப்புக்குட்டி பேசும் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.
உதாரணத்திற்கு ஒரு காட்சியில், வெள்ளைக்காரர் ஒருவர் ரொட்டியை வம்படியாக அப்புக்குட்டிக்கு கொடுக்க அதை வாங்கித் தின்பது போல் ஆற்றில் வீசிவிட்டு, “ஹ்ம்ம்.. சாப்பாடுன்னா தண்ணியில போட்ட முழுகணும்.. இது என்ன படகு மாதிரி மெதக்குது” என்கிறார். அப்புறம் ‘புலி’களைப் பற்றியும் பேசியுள்ளார். (அந்த வசனத்தின் சுவாரஸ்யம் கருதி இங்கே சொல்லவில்லை)
இது தவிர, TEA பற்றிய விளக்கமும், நாயர் கதாப்பாத்திரம் கிருஸ்தவராக மாறுவதும் மிகவும் நுணுக்கமான விசயங்கள். அதை மிகவும் விளக்கமாகச் சொல்லாமல் மேலோட்டமாகச் சொல்லி சர்ச்சைகளை சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டார் இயக்குநர்.
திரைக்கதை
அரச காலத்தில் நடந்தவைகள் அனைத்தையும் கிராபிக்சில் காட்டி நமக்கு கதையின் பின்புலத்தை புரியவைத்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நேரடியாக ஹீரோவின் கைகளில் அந்த மாயப் புத்தகத்தை சேர்த்திருக்கலாம். ஆனால் மாறாக அந்தப் புத்தகத்தை அவர் கைக்கு கொண்டு சேர்ப்பதற்கும், அந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை அவர் திறந்துப் பார்த்து புரிந்து கொள்வதற்கும் இடைப்பட்ட கதை நகர்த்தலில் ஜவ்வாக இழுக்கிறது.
சென்னையில் வேலை தேடி அலைகிறார் பாபி சிம்ஹா. ஒரு கால் செண்டரில் வேலைக்கு சேர்கிறார். அங்கு ரேஷ்மியை சந்திக்கிறார். திடீரென பிளாஷ்பேக் என்ற பெயரில் பாபி சிம்ஹா, ரேஷ்மியின் கல்லூரி நாட்களுக்கெல்லாம் செல்கிறது. ஆனால் அங்கு காதலும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. இப்படியாக கதை வேறு ஒரு கோணத்தில் செல்கிறது. ஆனால் படம் பார்க்கும் நமக்கு அந்தப் புத்தகத்தின் மீது தான் அத்தனை எதிர்பார்ப்பும் ஏற்படுகின்றது.
எப்போது நாம் படத்துடன் ஒன்ற முடிகின்றது என்றால், கேரளாவில் நடக்கும் முந்தைய ஜென்மக் கதையில் தான். அதன் காட்சியமைப்புகளும், கதை சொல்லிய விதமும் மிகவும் அருமை. அந்த சுவாரஸ்யத்தை வைத்து தான் மீதிப் படத்தையும் நம்மால் பார்க்க முடிகின்றது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிகவும் வித்தியாசமான முறையில் மிகவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு, இசை
ரவிந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. கேரள வனப்பகுதியும், ஆறுகளும், மலைகளும் மிகவும் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
அச்சு ராஜாமணியின் இசையில், ‘உமையாள்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற பாடல்கள் அற்புதம். செழியன் கதாப்பாத்திரத்திற்கு வரும் பின்னணி இசை மிகவும் அருமை..
மொத்தத்தில், உறுமீன் – இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம்!
-ஃபீனிக்ஸ்தாசன்