Home Featured நாடு மலேசியாவில் 9 ஆண்டுகளில் 28,741 பாலியல் வழக்குகள் – குற்றம் நிரூபிக்கப்பட்டது 765 வழக்குகள் மட்டுமே!

மலேசியாவில் 9 ஆண்டுகளில் 28,741 பாலியல் வழக்குகள் – குற்றம் நிரூபிக்கப்பட்டது 765 வழக்குகள் மட்டுமே!

1408
0
SHARE
Ad

rapeyகோலாலம்பூர் – “மலேசியாவில் ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இத்தகைய வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 16 வயதிற்கும் குறைவாக உள்ள இளம் பெண்கள் தான்” – இப்படி ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை பினாங்கு துணை முதல்வர் டத்தோ முகமட் ரஷீத் ஹஸ்னான் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பினாங்கு கோஸ் ஆரஞ்சு பிரச்சாரம் (Penang Goes Orange campaign) நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய முகமட் ரஷீத் ஹஸ்னான், மேற்கூறிய அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். மேலும் அவர், 2013-ஐ ஒப்பிடுகையில் தற்போது சிறார்கள் தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பினாங்கு பெண்கள் மேம்பாட்டு கழகம் (PWDC) இந்த பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்த பிரச்சாரத்தின் போது பிடபிள்யூடிசி வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த 2000-2013 வரை மலேசியாவில், 31,685 பலாத்கார வழக்குகளும், 42,449 வீட்டு வன்முறை வழக்குகளும், பொது இடங்களில் கண்ணியக் குறைபாடாக நடத்தப்பட்டதாக 24,939  வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 10-ல் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுவதாக அந்த பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிடபிள்யூடிசி இயக்குனர் யாப் சூ ஹ்யூ இது தொடர்பாக கூறுகையில், “உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, 2005 முதல் 2014 வரை 28,741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 16 சதவீத வழக்குகள் (4,514) நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வழக்குகளில் 2.7 சதவீதம் (765) மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.