கோலாலம்பூர்: தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப் பேரவையின் வழி மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 டிசம்பர் 31 வரைக்குமான கணக்கறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டில் அம்னோவுக்கு கிடைத்த மொத்த நன்கொடையே 82 மில்லியன்தானாம்!
ஆனால், நஜிப்பின் வங்கிக் கணக்கில் அவருக்கெனக் கிடைத்த தனிப்பட்ட நன்கொடையோ 2,600 மில்லியன்கள். ஆம்! அவருக்குக் கிடைத்த 2.6 ரிங்கிட் பில்லியன் தொகையை வகுத்தால் 2,600 மில்லியன்கள் வரும்!
அம்னோ கிளைகளின் குழுவொன்று கடந்த டிசம்பர் 8ஆம் தேதி சங்கப் பதிவகத்தில் செய்த புகார் ஒன்றில் நஜிப்பின் மிகப்பெரிய நன்கொடை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. நஜிப்பிற்குக் கிடைத்த நன்கொடை அம்னோவுக்கான அரசியல் நன்கொடை என்றும் அதனை திசைதிருப்பி அவருடைய சொந்தக் கணக்கில் செலுத்தியிருக்கின்றார்கள் என்றும் இந்தக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டின் – ஏன் உலகிலேயே மிகப் பெரிய கட்சிகளுள் ஒன்றான – அம்னோவுக்கு வெறும் 82 மில்லியன் நன்கொடை மட்டுமே கிடைக்க, நஜிப்புக்கு மட்டும் இவ்வளவு பெரிய நன்கொடையை எந்தவித பிரதிபலனும் இல்லாமல் கொடுத்த ‘அந்த ரொம்ப நல்லவர்’ யார் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் அம்னோவின் கணக்கறிக்கையில் 2014ஆம் ஆண்டில் அந்தக் கட்சி 31மில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையுடன் செயல்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் 2013ஆம் ஆண்டில் 147.15 மில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற்ற அம்னோ 2014இல் 171.53 மில்லியன் வருமானத்தை அதாவது 24 மில்லியனுக்கும் கூடுதலான வருமானத்தைப் பெற்றது.
இவ்வளவு வருமானம் வந்தும் அந்தக் கட்சியின் செலவினங்கள் 203 மில்லியனாக இருந்ததுதான், பற்றாக்குறை ஏற்பட்டதற்கான காரணமாகும். ஆனால், தேர்தல் ஆண்டான 2013ஆம் ஆண்டில் அம்னோ 284 மில்லியன் ரிங்கிட் செலவினத்தைக் கொண்டிருந்தது.