கோயம்புத்தூர்: தமிழக வெள்ளம் வடிந்ததும், தமிழகம் முழுவதும் புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது சிம்பு-அனிருத் உருவாக்கி இணையத் தளங்களில் வெளியிட்ட ஒரு வக்கிரப் பாடல்தான்.
நேற்று, கோவை நகரில் இந்தப் பாடலை பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அணிதிரண்டு கண்டனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அந்தப் போராட்டத்தின் போது சிம்பு, அனிருத் புகைப்படங்களை பெண்கள் கிழித்தெறிந்தும், அவர்களின் புகைப்படங்களுக்கு செருப்படிகள் தந்தும் தங்களின் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டியுள்ளனர்.
இந்தப் பாடலுக்கு எதிராக பலத்த கண்டனங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைப்பதிவில் இந்தப் பாடல் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
அனிருத் இதுவரை இந்தப் பாடல் பற்றி வாய் திறக்காத நிலையில் சிம்புவோ வழக்கம்போல் துடித்தெழுந்து தனது தனி உரிமை இதுவெனத் தற்காத்துப் பேசியுள்ளார்.
சமூக வலைத் தளங்களில் சிம்பு-அனிருத் இருவரும் பலத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளனர். பெண்களும், மற்ற சமூக ஆர்வலர்களும் சிம்புவையும் அனிருத்தையும் இணையத் தளங்களில் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.
காவல் துறையில் வழக்குப் பதிவு
இந்நிலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கையோடு, கோவை காவல்துறையில் பெண்கள் அமைப்பினர் சிம்பு, அனிருத் மீது புகார் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை காவல் துறை சிம்பு, அனிருத் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.