கோலாலம்பூர் – நேற்றுடன் நடைபெற்று முடிந்த அம்னோ பொதுப் பேரவையில் நிறைவுரையாற்றிய அம்னோ தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நான் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள விரும்புகின்றேன். எனது கதவுகளையும், இதயத்தையும் திறந்து வைத்திருக்கின்றேன். கட்சியை பலப்படுத்துவதற்காக அனைவருக்கும் எனது நட்புக் கரத்தை நீட்டுகின்றேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளது அம்னோவின் நடப்பு அரசியல் போராட்ட அத்தியாயத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைகுலுக்கும் நஜிப்-மொகிதின் (பழைய கோப்புப் படம்)
அதே வேளையில் “பின்வாங்கப் போவதில்லை, சரணடையப் போவதில்லை” என்றும் நஜிப் எச்சரிக்கை அறைகூவலையும் விடுத்திருக்கின்றார்.
“அதே வேளையில் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையையும் விடுக்க விரும்புகின்றேன். என்னைத் தொடர்ந்து எதிர்ப்பதோடு, என்னோடு சண்டை போடவும் நீங்கள் யாராவது விரும்பினால், ஜாக்கிரதை. இனிமேல் நஜிப் ரசாக் என்ற என்னோடு மட்டும் நீங்கள் போராடப் போவதில்லை. இனி இது எனக்கு எதிரான தனிப்பட்ட போராட்டமல்ல. மாறாக, அம்னோவின் அமைதிக்கும் ஊறு விளைவிக்கிறீர்கள், அம்னோ பேரவையின் முடிவுகளுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்” என்றும் நஜிப் எச்சரித்துள்ளார்.
நஜிப்பின் இந்த உரைக்கு அம்னோ பொதுப் பேரவையில் பேராளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
தனது உரைக்குப் பின்னர் தனது இருக்கைக்குத் திரும்பும் வேளையில் துணைத் தலைவரான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் கைகுலுக்கியுள்ளார் நஜிப்.
புனித நூலான திருக்குரானை மேற்கோள் காட்டி “எல்லாம் வல்ல அல்லாதான் அனைத்தையும் திட்டமிடத் தகுதியானவன். மலாய்க்காரர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் மரியாதை அளிக்க வேண்டும். நமது தலைவர்களுக்கு விசுவாசம் காட்ட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அம்னோவில் ஏற்பட்டிருக்கும் சூட்டைத் தணிக்கவும் மகாதீர், மொகிதின், ஷப்டால் கூட்டணிக்குப் பெருகி வரும் ஆதரவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் நஜிப் நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், மொகிதினோ “சரி! அடுத்தது என்ன?” என்று கேள்வி தொடுத்துள்ளார்.
அம்னோ பேரவையைத் தொடர்ந்து தற்போது அம்னோ-மலாய் அரசியலில் மூன்று கேள்விகள் எழுந்துள்ளன:
- நஜிப்-மொகிதின் இடையில் சமாதானம் ஏற்பட்டு, மொகிதின் நஜிப்புக்கு எதிரான தனது போராட்டத்தைக் கைவிடுவாரா?
- அல்லது நஜிப் பதவி விலக வேண்டும் என்ற பிரச்சாரத்துடன் கூடிய தனது போராட்டத்தை மகாதீர்-ஷப்டாலுடன் இணைந்து தொடர்வாரா?
- மொகிதினை நஜிப் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவாரா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களை காலம் எப்படி வழங்கப்போகின்றது என்பதை வைத்துத்தான் அம்னோவின் எதிர்கால அரசியல் உருவெடுக்கப் போகின்றது.