கோலாலம்பூர் – வரும் டிசம்பர் 17-ம் தேதி நாடெங்கிலும் முதன்மைத் திரையரங்குகளில் வெளியாகவுள்ள, ‘ஜகாட்’ திரைப்படத்திற்கு, இப்போதே மலேசியாவின் பல்லின மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
கதை நடக்கும் சூழலும், அதன் காட்சியமைப்புகளும் நமக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளதோடு, படத்தின் பின்னணி இசை உண்மையில் நம்மை மெய் மறக்கச் செய்கின்றது.
இந்தப் படத்திற்கு பின்னணி இசை கோர்த்திருப்பவர் மலேசியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான கமால் சப்ரான்.
தமிழ் படங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இசை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ‘ஜகாட்’ திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் பெருமாள், பலக் கட்ட தொடர்ச்சியான தேடல்களுக்குப் பிறகு கமால் சப்ரானை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
சஞ்சயின் முயற்சிக்கும், ஆவலுக்கும் ஈடாக கமால் சப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கும் பின்னணி இசை அதை மேலும் உயிரோட்டமாக்கியுள்ளது.
கமால் சப்ரானோடு, இசை கோர்ப்பதில், போலந்து நாட்டைச் சேர்ந்த எரிக் ஹவுஸ்மேனும், டோராண்டோவைச் சேர்ந்த ஜோகின்சனும் பணியாற்றியுள்ளனர்.
அண்மையில், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், நாட்டின் முக்கியக் கலைஞர்களுக்கும் சிறப்புக் காட்சியாக ‘ஜகாட்’ காட்டப்பட்டது. மலாய், சீனர் , இந்தியர் என இன பேதமின்றி படம் பார்த்தவர்கள் அனைவரும் மனம் திறந்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 17 -ம் தேதி முதல் படம் பார்க்கும் பொதுமக்கள் மத்தியிலும், அந்தப் பரவசமும், மலேசிய சினிமாவின் உண்மையான தனித்துவத்தை அறிந்து கொண்ட மகிழ்ச்சியும் தொற்றிக் கொள்ளும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
– ஃபீனிக்ஸ்தாசன்