கோலாலம்பூர் – தேசிய முன்னணியின் கூட்டணியில் பாஸ் கட்சி இணைவதற்கு மசீச எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று தெரிவித்துள்ளார்.
சுபாங் ஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாங்கள் தேசிய முன்னணியின் கூட்டணியில் இருக்கும் சீனக் கட்சியாக இருப்பினும், அம்னோவின் முடிவுகளில் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினும், தேசிய முன்னணியுடன் பாஸ் கட்சி இணைவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
“அம்னோவின் தனிப்பட்ட விவகாரங்களில் மசீச தலையிட்டு கேள்வி எழுப்பாது. ஆனால் தேசிய முன்னணியில் பாஸ் கட்சியை இணைப்பதாக இருந்தால், உச்ச மன்றத்தில் கலந்தாலோசிக்க வேண்டும்.”
“பாஸ் கட்சி ஹூடுட்டை கைவிட்டால் ஒழிய, நாங்கள் கண்டிப்பாக அதற்கு எதிராக நிற்போம். நாங்கள் எங்களது எண்ணங்களையும் திட்டங்களையும் வெளிப்படுத்துவோம் (நாங்கள் பாஸ் கட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டோம்).” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில், அதன் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாஸ் கட்சியுடன் கைகோர்க்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.