கோலாலம்பூர் – பணம் மட்டும் தான் வாழ்க்கையல்ல அதையும் தாண்டி இந்த உலகத்தில் துன்பத்தில் தாங்கிப் பிடிக்க, கஷ்டத்தில் தோள் கொடுக்க உறவுகள் உண்டு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் தமிழ்ப் படங்கள் அவ்வப்போது வெளிவந்து நம்மை நினைவு படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வரிசையில், விஐபி தனுஷ் – வேல்ராஜ் கூட்டணி மீண்டும் ஒரு அசத்தலான குடும்பப் பாங்கான கதையுடன் உருவாக்கியிருக்கும் படம் தான் ‘தங்கமகன்’.
குடும்பப் பாங்கான படம் என்றவுடன் காதல் சமாச்சாரங்கள் இல்லையோ என்று எண்ணத் தேவையில்லை. குடும்பச் சூழலுக்கு கதை வருவதற்கு முன்பு, தனுஷ், எமி ஜாக்சன் காதல் காட்சிகள், உதட்டோடு உதடு முத்தம் என இளமைத் துள்ளலும் இருக்கின்றது. ஆனாலும் ஆபாசமாக இல்லை என்பதே அதன் சுவாரஸ்யம்.
நடிப்பு
தனுஷ்… நடிப்பில் அத்தனை முதிர்ச்சியும், அனுபவமும்.. நடுத்தவர்க்கத்தைச் சேர்ந்த முகவெட்டு என்பதாலோ என்னவோ ‘தமிழ்’ கதாப்பாத்திரம் அவருக்கு அச்சு அசலாகப் பொருந்துகின்றது.
எமி ஜாக்சனுடனான காதல் காட்சிகளில் இளமை கூட்டியிருக்கும் அதே நேரத்தில், “என்னம்மா.. நீ ஏம்மா இதெல்லாம் செய்ற” என்று கர்ப்பமாக இருக்கும் மனைவி சமந்தாவைத் தாங்கு தாங்கென்று தாங்கும் காட்சிகளில், தனுஷ் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்று பெண்கள் தேடும் அளவிற்கு கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
எமி ஜாக்சன்.. ‘ஐ’ பட பேரழகியை இதில் பார்க்க முடியவில்லை. முகத்தில் சற்று முதிர்ச்சி முந்திக் கொண்டு தெரிகின்றது. ஆனால் சிறப்பான நடிப்பாலும், உடல் மொழிகளாலும் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். தமிழ் உச்சரிப்புகளுக்கு வாயசைக்கும் அவரது பாணி மட்டும் அழகோ அழகு.
யமுனா கதாப்பாத்திரத்தில் சமந்தா.. ‘அஞ்சானை’ ஒப்பிடுகையில் தங்கமகன் இயக்குநருக்கு சமந்தா எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அந்தளவிற்கு நடிப்பதற்கு இதில் வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளார் இயக்குநர்.
கூட்டுக் குடும்பத்தில் இடப்பற்றாக்குறையால் சத்தமின்றி கணவனுடன் காதல் கொள்ளும் காட்சிகளிலும், வீட்டில் யாரும் இல்லை என்றவுடன் கண்ணில் காட்டும் கிறக்கத்திலும் யமுனாவாகவே சமந்தா வாழ்கிறார்.
தனுஷின் அப்பாக கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக ராதிகா, நண்பராக சதீஸ், முதலாளியாக ஜெயப்பிரகாஷ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்களது பங்குகளை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
அதிலும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகச் சிறப்பான கதாப்பாத்திரம். அதை மிக அழகாக செய்திருக்கிறார். அரவிந்த் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் புதுமுகம் என்றாலும் தனது நடிப்பால் ஈர்க்கிறார்.
ஒளிப்பதிவு, இசை
ராஜேஷ்குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. குறிப்பாக மழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வீதிகள், வீடுகள் ஆகியவற்றில் மிக நேர்த்தியாக கேமரா பயணித்திருக்கிறது. அதிகமான காட்சிகளில் மொட்டை மாடியைப் பயன்படுத்தியிருப்பது மிகவும் அழகு.
அனிருத் இசையில் பாடல்கள் எளிமையாக, மனதில் தங்கிவிடும் வகையில் உள்ளன.
திரைக்கதை,வசனம்
“பணம் ஒருத்தனை பெரியாளாகவும் ஆக்கும், பைத்தியக்காரனாகவும் ஆக்கும்”, “சார்.. பணம் தான் முக்கியம்னு எல்லாருமே நெனச்சுர மாட்டாங்க”, “தமிழ்நாட்டுல தமிழ் என்னைக்கும் தோக்காது” போன்ற மனதில் நச்சென நிற்கும் வசனங்கள் படத்தில் உள்ளன.
“எங்கப்பா அம்மாவுக்கு எடமில்லன்னா, அந்த வாழ்க்கையே எனக்குத் தேவையில்லடி”, வயிற்றில் இருக்கும் குழந்தையிடம், “சொந்தக்காரங்களை மட்டும் நம்பிராத”, “டே நீயும் என் ரத்தம் தானடா” என நெஞ்சைத் தொடும் வசனங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அவை காட்சிகளுக்கு பக்கபலம் சேர்த்துள்ளன.
என்றாலும், இடைவேளைக்கு முன் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு எதிர்பார்த்த ஒரு வேகத்தைத் தரவில்லை.
விஐபி படத்துடன் ஒப்பிடுகையில், தான் எடுத்த காரியத்தை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்க்கொள்ளும் சவால்கள், தங்கமகனில் மிகவும் குறைவு என்பதோடு, சவால்கள் எல்லாம் மிக எளிதில் சுமூகமாகிவிடுகின்றன.
இதனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்த ஒரு பரபரப்பை கொடுக்கத் தவறும் திரைக்கதை, சட்டென சுபம் போட்டு முடிவுக்கு வந்துவிடுகின்றது.
“படம் முடிஞ்சிருச்சா?” என்று சந்தேகத்துடன் கேட்கும் படியாகத் தான் படத்தில் கிளைமாக்ஸ் உள்ளது.
என்றாலும், குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான பல விசயங்கள் படத்தில் உள்ளன என்பதால் தங்கமகன் தரத்தால் ஈர்க்கிறான்.
மொத்தத்தில் – காதல், குடும்பம், வாழ்க்கையின் முக்கியத்துவம் சொல்லும் அழகான படம்!
– ஃபீனிக்ஸ்தாசன்