Home Featured நாடு மைபிபிபி-மஇகா மோதல்: நீதிமன்றம் செல்லுமா?

மைபிபிபி-மஇகா மோதல்: நீதிமன்றம் செல்லுமா?

740
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மைபிபிபி என்ற புதிய பெயரோடு உருமாற்றம் கண்டிருக்கும் பிபிபி கட்சியினருக்கும், மஇகாவினருக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் புதிதல்ல. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்கமான ஒன்றுதான்.

இந்தியர் பிரச்சனைகளில் இரண்டு கட்சிகளும் பலமுறை கடந்த கால கட்டங்களில் மோதிக் கொண்டுள்ளன. பொதுத் தேர்தல்களின்போது தொகுதி ஒதுக்கீடுகளிலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

kayveas-02-300x168தற்போது புதிதாக முளைத்துள்ள சர்ச்சையைக் கொளுத்திப் போட்டவர் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்தான்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மைபிபிபியின் ஆண்டுப் பேரவையின்போது, இந்தியர்களுக்கான அரசாங்க மான்யங்கள் என்னவாயின எனக் கேள்வி எழுப்பிய கேவியெஸ், அந்த மான்யங்கள் இந்திய சமுதாயத்துக்கென மஇகாவுக்கு கொடுக்கப்பட்டது என்பது போன்று தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மஇகாவின் பல முக்கியத் தலைவர்கள் கேவியசுக்கு எதிராக அறிக்கைகள் விடுத்து கண்டனங்கள் தெரிவித்தனர்.

மஇகாவின் இளைஞர், மகளிர் பகுதித் தலைவர்கள், மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோர் தனித் தனியாக பத்திரிக்கை அறிக்கைகளின் வழி கண்டனங்கள் தெரிவிக்க, மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகனும் 22 ஆண்டுகளாக எதுவுமே செய்யாத கேவியஸ்  பதவி விலகிச் செல்வதே நல்லது எனத் தெரிவித்திருந்தார்.

கேவியஸ் பதில்

Mohan T-MICதனது தலைமையுரை சர்ச்சையானதைத் தொடர்ந்து, தனக்கு எதிரான இந்த கண்டன அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கேவியஸ், ஒரு பதில் அறிக்கை விடுத்திருந்தார்.

அந்த அறிக்கையில், வழங்கப்பட்ட அரசாங்க மான்யங்கள் எங்கே போயின என்று மட்டும்தான் தான் கேள்வி எழுப்பியதாகவும், அதனைப் பெற்றவர்கள் யார் என்றுதான் கேள்வி எழுப்பியதாகவும், மாறாக, சில மஇகா தலைவர்கள் கூறுவதைப்போல், மஇகா என்ற பெயரையே தான் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றும், கேவியஸ் பதில் கூறியிருந்தார்.

என்மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவதை விட்டுவிட்டு, நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்றும் கேவியஸ் காட்டமாக பதிலளித்திருந்தார்.

Loga Bala Mohan 2இது குறித்து கருத்துரைத்துள்ள கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், பிபிபி தலைவர்களுள் ஒருவருமான டத்தோ லோகபாலமோகன், கேவியஸ் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு, கேவியஸ் கூறியுள்ள விளக்கங்கள் மீது திருப்தியில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துக் கொள்ளுங்கள் என்று மஇகாவினருக்கு சவால் விட்டுள்ளார்.

தேசிய முன்னணி கூட்டணிக் கட்சியின் தலைவர் ஒருவர் சொல்லும் கருத்துகள் மீது பொறுப்புணர்வு இன்றி மஇகா தலைவர்கள் பதிலடி கொடுக்கக்கூடாது என்றும் பாலமோகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிபிபி-மஇகா இடையிலான மோதல்கள் இத்துடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிபிபி-மஇகா இடையிலே இதுபோன்ற முட்டல், மோதல்கள் நெடுங்காலமாக நடந்து வரும் வழக்கமான அரசியல் உரசல்கள்தான் என்றும் இதற்காக  யாரும் நீதிமன்றம் எல்லாம் செல்லமாட்டார்கள் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

-செல்லியல் தொகுப்பு