கோலாலம்பூர் – டிசம்பர் 17ஆம் தேதி உலகம் எங்கிலும் திரையீடு கண்ட ‘ஸ்டார் வார்ஸ்’ ஆங்கிலப் படம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.
வியாழக்கிழமை இரவு சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்ட இந்தப் படம் அன்று மட்டும் 57 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது.
அதிகாரபூர்வமாக வெள்ளிக்கிழமை திரையீடு கண்ட ஸ்டார்ஸ் வார்ஸ் அந்த ஒரே நாளில் மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால், வரலாற்றில் அதிக முதல் நாள் வசூல் செய்த படமாக இது திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்பு ஹாரி போட்டர் (Harry Potter), டெத்லி ஹால்லோஸ் பாகம் 2 (Deathly Hallows, Part 2) ஆகிய படங்கள் 91.1 மில்லியன் டாலர் வசூலித்து இதுவரை முதல் நிலையில் இருந்து வந்துள்ளன. எனவே, முதல் நாள் வசூலில், 100 மில்லியனைத் தொடும் முதல் படமாக ஸ்டார் வார்ஸ் திகழ்கின்றது.
இப்போது ஹாலிவுட் வட்டாரங்கள் அதிகம் எதிர்பார்த்திருப்பது, வார இறுதியில் (அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு இணைந்த 3 நாட்கள்) அதிகம் வசூலிக்கும் படமாக ஸ்டார் வார்ஸ் உருவெடுக்குமா என்பதுதான்.
இந்த சாதனையைத் தற்போது கைவசம் வைத்திருப்பது கடந்த ஜூன் மாதம் வெளியான ஜூராசிக் வோர்ல்ட் படம்தான். வெளியிடப்பட்ட முதல் வார இறுதிநாட்களில் மட்டும் 208.8 மில்லியன் டாலர்களை வசூலித்து முதல் வார இறுதியில் அதிக வசூலைக் குவித்த படமாக ஜூராசிக் வோர்ல்ட் திகழ்கின்றது.
இந்த சாதனையையும் ஸ்டார் வார்ஸ் முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலப் பட வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படம் சாதனை படைக்கலாம்.
-செல்லியல் தொகுப்பு