கோலாலம்பூர் – மலேசியாவில் மாலை நேரப் போக்குவரத்து நெரிசல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு நகரங்களின் முக்கியச் சாலைகளில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோரின் கார்கள் நிரம்பி வழியும்.
அப்படிப்பட்ட நேரத்தில் விஐபி ஒருவரின் காருக்காக மக்கள் வழிவிடுவார்களா? அதுவும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் காராக இருந்தால்? – இல்லை என்பதே பதில் என்று சொல்லும் அளவிற்கு பட்சில் கைரில் என்ற நபர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி தனது பேஸ்புக்கில் பகிர்ந்த தகவல் கூறுகின்றது.
தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து ஆமை போல் நகர்ந்து கொண்டிருந்தோம், அந்த நேரத்தில், அங்கு விரைந்து வந்த போக்குவரத்துக் காவல்துறையினர், எங்களை இடது பக்கம் நகர்ந்து வழி விடும் படி உத்தரவிட்டனர். நான் அவர்களை சலிப்புடன் பார்த்தேன். ”
“அந்த விவிஐபி-ன் கார் கடந்து சென்றது. அது நமது பிரதமர் நஜிப் ரசாக்கின் அதிகாரப்பூர்வ கார் தான்”
“அதைப் பார்த்த நான் வெடித்துச் சிரித்தேன். காரணம் யாரும் பிரதமரின் காருக்கு வழி கொடுக்கவில்லை. அதற்குள் அந்த போக்குவரத்துக் காவல்துறையினர் மிகவும் பதட்டமடைந்து செய்வதறியாமல் திகைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தங்களது கடமையைச் செய்யும் காவல்துறையினர் மீது நாங்கள் கோபப்படவில்லை. அதேநேரத்தில், நாட்டின் அமைச்சர்கள் பேசியவையையும் நினைத்துப் பார்க்காமல் இல்லை. சுங்கக் கட்டணம் அதிகரித்த போது, அமைச்சர்கள் நம்மிடம் என்ன சொன்னார்கள், நீங்கள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டாம் என்று நினைத்தால், அதிகாலையிலேயே எழுந்து பயணம் செய்து போக்குவரத்து நெரிசலைத் தவிருங்கள் என்றார்கள்” என்று அமைச்சர் ரஹ்மான் டாலான் முன் ஒரு முறை கூறிய கருத்தை அந்த பேஸ்புக் பதிவாளர் நினைவு கூர்ந்துள்ளார்.
“அமைச்சர்களே, எதிர்காலத்தில் நீங்கள் போக்குவரத்தில் சிக்க வேண்டாம் என்று நினைத்தால், வேலைக்கு அதிகாலையிலேயே எழுந்திருங்கள், அல்லது வேலைக்குத் தாமதமாகச் செல்லுங்கள், வேண்டுமானால் பொதுப் போக்குவரத்தைக் கூடப் பயன்படுத்தலாம்” என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு மலேசியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.