புதுடெல்லி – கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி, 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், எஞ்சியுள்ள ‘மைனர்’ குற்றவாளி நாளை விடுதலை செய்யப்படவுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 6 பேரில், ஒருவர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீதமிருந்த 5 பேரில் 4 பேருக்கு மரணம் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொருவர் இளம் குற்றவாளி என்பதால், கடந்த 3 ஆண்டுகளாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், தண்டனைக் காலம் நிறைவடைந்து நாளை அவர் விடுதலையாகவுள்ளார்.
இதனிடையே, அவரது விடுதலைக்கு மாணவியின் பெற்றோர், அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
தற்போது 21 வயதாகியுள்ள அக்குற்றவாளி சிறையில் இருக்கும் போது, தையல் தொழிலில் ஆர்வம் காட்டியதால், நாளை அவர் விடுதலை செய்யப்பட்டவுடன் அவருக்கு சிறுதொழில் தொடங்க வசதி செய்து தரப்படவுள்ளது.
இளம் குற்றாவாளியான அவர் தனது தவறை உணர்ந்துவிட்ட நிலையில், புது வாழ்க்கையை தொடங்க அவருக்கு அரசு உதவி புரிய வேண்டும் என்று சிறுவர் சீர்திருத்த மையம் தெரிவித்துள்ளது.