Home Featured நாடு பல தடைகளைத் தாண்டி 342 கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தன! “கட்சி ஒற்றுமைக்கான வெற்றி” –...

பல தடைகளைத் தாண்டி 342 கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தன! “கட்சி ஒற்றுமைக்கான வெற்றி” – சக்திவேல் பெருமிதம்!

1103
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று நடைபெற்ற மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கலில் நாடெங்கிலும் 342 மஇகா கிளைகள் பங்கு பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் (படம்) இது வரவேற்கத்தக்க, குறிப்பிடத்தக்க வெற்றி என்றும், இதன்வழி கட்சி மேலும் ஒன்றுபடுவதோடு, மேலும் வலுப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Sakthivel-Sliderஇன்றைய வேட்புமனுத் தாக்கல் குறித்து செல்லியல் தகவல் ஊடகம், சக்திவேலைத் தொடர்பு கொண்டபோது, சக்திவேல் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

“எத்தனையோ தடைகள், எத்தனையோ நெருக்குதல்கள் இருந்தும், வேட்புமனுத் தாக்கல் நடக்காது என்றும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது என்றும் பலவகையான பொய்ப் பிரச்சாரங்களை எதிர் தரப்பினர் மேற்கொண்டிருந்த போதிலும் அவற்றையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் 342 கிளைகள் முன்வந்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளது குறித்து நாங்கள் பெருமைப்படுகின்றோம். இது டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றி” என்றும் சக்திவேல் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“கட்சியில் மீண்டும் இணைந்துள்ள கிளைகளுக்கு வாழ்த்து கூறி வரவேற்பதுடன், கட்சியின் ஒற்றுமை கருதி, அரசியல் பகைமைகளை மறந்து மீண்டும் மஇகாவில் இணைந்த இந்த கிளைகளின் தலைவர்களுக்கு நாங்கள் பாராட்டும் கூறுகின்றோம்” என்றும் சக்திவேல் குறிப்பிட்டார்.

பழனிவேல் அணியின் சக்தி கணிசமாகக் குறையுமா?

G PALANIVEL / SEPETANG BERSAMA PRESIDEN MICஇன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் 342 கிளைகள் பங்கு பெற்றதைத் தொடர்ந்து, பழனிவேல் அணியினரின் தாக்கமும், பலமும் இனி கணிசமாகக் குறையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கட்சிக்கு வெளியே இருக்கும் 800 கிளைகளில் 342 கிளைகள் மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ளது என்பது ஏறத்தாழ 40 சதவீத கிளைகள் மீண்டும் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு கட்சிக்குத் திரும்பியுள்ளதைக் காட்டுகின்றது.

எண்ணிக்கை ஒருபுறமிருக்க இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த கிளைத் தலைவர்களில் பழனிவேல் தரப்பைச் சார்ந்த பல முக்கியத் தொகுதித் தலைவர்களும், பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் சிலரும் அடங்குவர் என்பதால், இனி பழனிவேல் தரப்பினரின் அரசியல் பலம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளின் எண்ணிக்கை 1,800 என பழனிவேல் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் சங்கப் பதிவகத்தின் அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி கட்சிக்கு வெளியே இருக்கும் கிளைகளின் எண்ணிக்கை சுமார் 800 மட்டுமே இருக்கும் என மஇகா தலைமையகம் கூறியுள்ளது.