புது டெல்லி – இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக, தாய் நாடு வந்திருந்த கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியா குறித்தும் இந்தியாவில் கூகுள் வளர்ச்சி குறித்தும் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் புதிய சிந்தனைகளும், அதற்கான மூளைகளும் நிறைய இருக்கின்றன. அதனை வெகு விரைவில் கூகுள் பயன்படுத்திக் கொள்ளும் என இந்திய இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கும் தகவலை வெளியிட்ட அவர், மற்றொரு சுவாரசியமான அறிவிப்பினையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அடுத்தடுத்து வெளியாகும் அண்டிரொய்டு பதிப்பில் இந்திய உணவுப் பண்டங்களின் பெயர்கள் இடம் பெறுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இது ஒரு நல்ல யோசனைதான். நான் என் அம்மாவிடம் இது குறித்து ஆலோசனை கேட்கிறேன். கூகுள் மூலம் ‘ஆன்லைன்’ (Online) வாக்கெடுப்பு ஒன்று நடத்தி இதுபற்றிய முடிவெடுக்கிறோம். அண்டிரொய்டு N வரிசைக்கு நீங்கள் கேட்டது நடக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை வெளியிட்ட மற்றொரு ஆச்சரியத் தகவல், அடுத்த சில ஆண்டுகளில், அண்டிரொய்டு பயனர்களின் எண்ணிக்கையில் இந்தியா, அமெரிக்காவை விஞ்சிவிடும் என்பதாகும். அப்படி எண்ணிக்கை உயரும்பட்சத்தில், கூகுள் சார்ந்த அனைத்து மாற்றங்களும் இந்தியாவில் இருந்து தான் தொடங்கப்படும் என்பது நிச்சயம்.
அதற்கான முன்னோட்டம் தான் சுந்தர் பிச்சையின் இந்திய வருகையும், இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பும்.