புது டெல்லி – நிர்பயா வழக்கில், நேற்று முன்தினம் சிறார்களுக்கான சிறையில் இருந்து மைனர் குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளியின் தண்டனையை நீட்டிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர். எனினும், அவர்கள் வழங்கி உள்ள தீர்ப்பில், சட்டத்தால் தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மகளிர் ஆணையத்தின் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட விடுமுறை அமர்வு, ”நீங்கள் படும் துன்பத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் நாங்களும் பங்கேற்கிறோம். ஆனால் சட்டத்தினால் எங்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இளம் குற்றவாளிகளின் தண்டனையை 3 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கும் வகையில், சட்டத்தில் இடம் இல்லை. இதுகுறித்து தெளிவான சட்டம் தேவைப்படுகிறது.”
“இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டே அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சட்டரீதியாக அனுமதி தேவைப்படுகிறது. சட்டத்தில் இடமில்லாத நிலையில், ஒருவருடைய அடிப்படை உரிமையை நீதிமன்றம் பறிக்க முடியாது” என்று தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.