கோலாலம்பூர் – பலவிதச் சர்ச்சைகளையும் விவாதங்களையும் நாட்டில் ஏற்படுத்திய தேசிய பாதுகாப்பு மன்ற மசோதா நேற்று எந்தவிதத் திருத்தங்களும் இன்றி நாடாளுமன்ற மேலவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேசிய முன்னணி சார்பிலான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் சிலரும் வழக்கத்திற்கு மாறாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஒருமித்த குரல் வழி ஆதரவோடு இந்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜசெகவின் செனட்டர் சந்திரமோகன் இந்த மசோதாவின் அம்சங்களை மேம்படுத்துவதற்கு சிறப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருந்தார். இருப்பினும் அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
மசோதா மீதிலான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக நிறைவுரை ஆற்றிய பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் “இந்த மசோதா மீதிலான குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்” என உறுதி அளித்தார்.
இந்த மசோதா, நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தின் எந்தவித சட்டத்தையும் மீறவில்லை என்றும் ஷாஹிடான் விளக்கமளித்தார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நடவடிக்கை இயக்குநர் வசம் அளவுக்கதிகமான அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பது குறித்து பலத்த கண்டனங்கள் இந்த மசோதா தொடர்பில் எழுப்பப்பட்டிருந்தன.
இனி இந்த மசோதா மாமன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
பொதுமக்களிடையே எதிர்ப்பையும், கண்டனத்தையும் தோற்றுவித்துள்ள இந்த மசோதாவை மாமன்னரும் அங்கீகரித்து, கையெழுத்திட்டு, இதனைச் சட்டமாக்குவாரா என்பதுதான் இப்போது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.