Home Featured கலையுலகம் பல்லின மக்களையும் கவர்ந்த ‘ஜகாட்’ திரைப்படத்தை – வர்த்தக ரீதியிலும் வெற்றியடையச் செய்வோம்!

பல்லின மக்களையும் கவர்ந்த ‘ஜகாட்’ திரைப்படத்தை – வர்த்தக ரீதியிலும் வெற்றியடையச் செய்வோம்!

669
0
SHARE
Ad

10547937_862958760491007_6467538441181014065_oகோலாலம்பூர் – கடந்த டிசம்பர் 17-ம் தேதி வெளியிடப்பட்டு இன்று வரை நாட்டின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வரும் ‘ஜகாட்’ திரைப்படம், இன்னும் ஒருசில நாட்களே திரையரங்குகளில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முழுமையாக இன்னும் 1 வாரம் கூட நிறைவடையாத நிலையில், அடுத்து வெளிவர இருக்கும் அனைத்துலகப் படங்களைக் காரணம் காட்டி, திரையரங்குகள் ‘ஜகாட்’ திரையிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளன.

இது தான்.. இன்றைய சூழ்நிலையில், மலேசியாவில் உருவாக்கப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை.

#TamilSchoolmychoice

மலேசிய சினிமாத் துறையைப் பொறுத்தவரையில், உள்ளூரில் உருவாக்கப்படும் திரைப்படங்களில், மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும், தமிழ்ப் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது பெரும்பாடாக இருந்து வருகின்றது.

‘வாஜிப் தாயாங் – WAJIB TAYANG’ என்ற திட்டத்தின் கீழ் ஃபினாஸ் (National Film Development Corporation Malaysia) அளித்து வரும் இரண்டு வார கட்டாயத் திரையிடல் முறையில், திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் கூட, மக்கள் வருகை குறைவாக உள்ளதாகக் கூறி அதை ஒரு சில நாட்களிலேயே நிறுத்தி விடுகின்றது திரையரங்கு நிர்வாகம்.

அதேவேளையில், திரையிடப்படும் நாட்களில் கூட பகல் மற்றும் மதிய நேரங்களில் மட்டுமே அப்படங்கள் திரையிடப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் வேலை முடிந்து இரவுக் காட்சிக்கு செல்வதையே விரும்பும் இன்றைய சூழ்நிலையில், பகல் மற்றும் மதியக் காட்சிகளில் மக்கள் திரையரங்கிற்கு வருவது குறைவே.

கடுமையான உழைப்பையும், சொந்த காசையும் போட்டு, ஒரு தரமான படைப்பைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கும் படக்குழுவினர், திரையரங்குகளின் ஆதரவின்றி வர்த்தக ரீதியாக வெற்றியடைய இயலாமல் போகின்றனர்.

பின் எப்படி அடுத்தடுத்து அவர்களிடம் தரமான படைப்புகளை எதிர்பார்க்க முடியும்?

‘ஜகாட்’ முறையாகத் திரையிடப்படவேண்டும் – இயக்குநர் சஞ்சய்

இது குறித்து இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ‘ஜகாட்’ இயக்குநர் சஞ்சய் பெருமாள், இத்திரைப்படம் இரண்டு வாரங்களையும் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும் என்றால், அது மக்கள் தரும் ஆதரவில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பலராலும் பாராட்டப்பட்டு வரும் ஒரு திரைப்படத்தை திரையரங்குகள், முழுமையாக இரண்டு வாரங்கள் திரையிடாமல் முடக்குவதால், அத்திரைப்படத்தின் வர்த்தக ரீதியான வெற்றி கடுமையாக பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரையரங்குகள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஃபினாசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றிச் சரியான நேரங்களில், சரியான கால அவகாசத்தில் திரைப்படத்தை தவறாமல் திரையிட வேண்டும் என்றும் சஞ்சய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ‘ஜகாட்’ திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் சிவா பெரியண்ணன் பேசுகையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்கிறோம் என்பதை அறிந்த பின்னரே, சில திரையரங்குகள் உடனடியாக இன்று இரவு காட்சிகளில் ‘ஜகாட்’ திரையிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது படைப்பின் மீது உள்ள நம்பிக்கை காரணமாகவே ‘ஸ்டார் வார்ஸ்’ போன்ற பெரிய பட்ஜட் படங்களோடு, ‘ஜகாட்’ திரைப்படத்தை வெளியிட்டிருப்பதாகக் கூறும் சிவா, திரையரங்குகள் முறையான நேரத்தில், முறையான காலம் வரை ‘ஜகாட்’ திரைப்படத்தை திரையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சில திரையரங்குகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென ‘ஜகாட்’ திரையிடுவதை நிறுத்துவதாகவும் சிவா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா மற்றும் நடிகர் கே.எஸ் மணியம், நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி, டிஎச்ஆர் ஆனந்தா, இசையமைப்பாளர் சுந்தரா, இயக்குநர் எஸ்டி.பாலா, லோகநாதன், உள்ளிட்ட மலேசியாவின் முன்னணிக் கலைஞர் பலரும் கலந்து கொண்டு ‘ஜகாட்’ திரைப்படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து ஃபினாசுடன் கலந்து பேசி விரைவில் ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவதாக சி.சிவராஜா உறுதியளித்துள்ளார்.

ஜகாட் வர்த்தக ரீதியாக வெற்றியடைய வேண்டும்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மலேசியத் திரைப்படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பு இல்லாமல் போவதற்கு அதன் தரம், கதை, நடிப்பு என பல காரணங்கள் காட்டப்பட்டு வந்தன.

ஆனால் அண்மையக் காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள், தமிழகத்தில் இருந்து வரும் படங்களுக்கு நிகரான தரத்துடன் இருந்து வருவது கண்கூடாகக் காண முடிகின்றது.

அவற்றில், ‘ஜகாட்’ ஒரு படி மேலே சென்று ஒரு தேசியப் படமாகவே பார்க்கப் படுகின்றது. அதனால் தான் மலாய்க்காரர்களும், சீனர்களும் கூட அத்திரைப்படம் வெளியான முதல் நாளே அவலுடன் படம் பார்க்கச் சென்றனர்.

இப்படி, இனம், மத பேதமின்றி மலேசியர்கள் அனைவரையும் ஈர்க்கும் கதையம்சத்துடனும், ஒரு சமூகத்தின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் அறிவார்ந்த படைப்பாகவும் விளங்கி வரும் ‘ஜகாட்’ திரைப்படம், வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே மலேசியத் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல நல்ல தரமான படைப்புகள் உருவாகக் காரணமாக அமையும்.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், மலேசிய இந்தியர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அவற்றில் சினிமாத்துறையும் ஒன்று.

மலேசியத் தமிழ் சினிமா வளரும் பட்சத்தில், அகில உலகமெங்கும் பரவி பல்வேறு அனைத்துலக விருதுகளை மலேசியாவிற்கு ஈட்டித் தரும் பட்சத்தில், அது மலேசிய இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பெருமையே!

ஒன்று படுவோம்! தரமான மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன! தவறாமல் அதற்கு ஆதரவு தருவோம்!

-ஃபீனிக்ஸ்தாசன்

படம்: எஸ்பி பிரபா பேஸ்புக்.