அதிமுகவைத் தவிர திமுக உட்பட முக்கிய கட்சிகளிடமிருந்து கூட்டணிக்கான நேரடியான அழைப்புகள் விஜயகாந்திற்கு வந்துவிட்டன. தமிழக பாஜக-வின் முக்கியத் தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்த அடுத்த சில தினங்களில், வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தினர் அவரை சந்தித்துப் பேசினர். அவர்கள் சந்தித்து சென்ற, அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே திமுக தலைவரிடம் இருந்து நேரடியான அழைப்பு விஜயகாந்திற்கு வந்தது. நேற்று காங்கிரசின் தமிழகத் தலைவர் இளங்கோவனும் எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். பாமாக ஏற்கனவே பல்வேறு வழிகளில் விஜயகாந்திற்கு, அழைப்புகளை விடுத்துக் கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளின் சந்திப்புகளைக் காரணம் காட்டி அரசியல் அரங்கில், தனக்கான செல்வாக்கினை அதிகரிக்கவே விஜயகாந்த் இப்படி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான், கருணாநிதியின் நேரடியான அழைப்பு.
விஜயகாந்த் ஒருவேளை மக்கள் நலக் கூட்டணி பக்கம் சாய்ந்துவிட்டால், அது திமுகவிற்கு மிகப் பெரிய அடியாக அமையும் என்பதை உணர்ந்து தான், கருணாநிதி, அத்தகைய அழைப்பினை விடுத்துள்ளார். இதன் மூலம் தான் நினைத்த காரியம் நடந்த களிப்பில் இருக்கும் விஜயகாந்த், இனி திமுகவிடம் தாரளாமாக கூட்டணி பேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தேமுதிகவை நம்பி அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் அபிமானிகள் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
– சுரேஷ்