கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், ஊழல் தடுப்பு ஆணையம் அச்சமின்றி, யாருக்கும் துணை போகாத வண்ணம் நடுநிலையாக விசாரணை செய்யும் என்றும் 2.6 பில்லியன் நன்கொடையின் பின்னணிகளை வெளியில் கொண்டுவருவோம் என்றும் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அபு காசிம் முகமட் (படம்) உறுதியளித்துள்ளார்.
சினார் ஹாரியான் மலாய் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் 2.6 பில்லியன் வழங்கிய நன்கொடையாளரைச் சந்தித்துத் தாங்கள் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாகவும், மேலும் சிலரை விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நன்கொடையாளர் தங்களின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அபு காசிம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நன்கொடையாளரின் விவரங்களைத் தான் வெளியிட முடியாது என்றும், சட்டத்திற்கு தான் கட்டுண்டு இருப்பதாகவும் குறிப்பிட்ட அபு காசிம், விசாரணைகளை நடத்தி முடிவுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு அறிவிப்பதுதான் தங்களின் வேலை என்றும் அதன்பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.