கோலாலம்பூர் – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், பிரபல ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், நாட்டில் இளைய தலைமுறையினரிடையே ஆங்கிலப் புலமை குறைந்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசாங்க அதிகாரிகள் உட்பட நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
“ஆமாம். நான் ஒப்புக் கொள்கிறேன். பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளுக்கு இன்று நல்ல ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியவில்லை. அதனால் தான் தற்போது நாட்டில் இருக்கும் மூன்று வகையான பள்ளிகளுக்கு நான் ஆதரவாக நடந்து கொள்வதில்லை.(தேசிய, சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள்)”
“இன்றைய காலத்தில், சீன மற்றும் தமிழ் மாணவர்களுக்கு மலாய் மொழியில் பேசத் தெரிவதில்லை. மலாய் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிவதில்லை.”
“அந்தக் காலத்தில், ஆங்கிலப் பள்ளிகள் நடுநிலமை வகித்தன. எல்லா இனங்களும் அப்பள்ளிகளில் படித்தனர். என்னுடைய காலத்தில், மலாய் மற்றும் ஆங்கிலம் கற்பது அவசியமாக இருந்தது.”
“ஆனால் இப்போது, கணக்குகள், புவியியல், வரலாறு ஆகியவற்றை மலாய் பள்ளிகளில் மலாய் மொழியில் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பல்கலைக்கழகங்கள் செல்லும் போது அவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலை ஏற்படும் போது மாணவர்கள் தோல்வியடைகின்றார்கள். உங்களின் ஆங்கிலப் புலமை பலவீனமாக இருந்தால், எப்படி விஞ்ஞானி ஆவீர்கள்?”
“அதனால் தான், எங்கள் வீட்டில் பிள்ளைகளிடமும், மனைவியிடமும் ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் பேசுகின்றேன். ஆனால் மக்களைச் சந்திக்கும் போது மலாய் மொழியில் பேசுகின்றேன். முந்தைய தலைமுறை மிக அழகாக ஆங்கிலத்தில் பேசினார்கள்.”
“ஆமாம், நீங்கள் ஆங்கிலத்தில் சரியாகப் பேசவில்லை என்றால், அந்த மொழி வயதானவர்களின் மொழியாகிவிடும் அபாயம் உள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மக்கள் மிகச் சிறப்பாக ஆங்கிலம் பேசுகின்றார்கள்”
“ஆனால் மலேசியாவில் அதற்கு நேர்மாறாக உள்ளது. நான் எச்சரிக்கை அடைகின்றேன். இந்த நிலையில் இருந்து எப்படி நம்மை வளர்த்துக் கொள்வது?”
“கல்வியையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் எந்த ஒரு நபரும் அரசியலாக்கக்கூடாது. இந்த நாட்டில் உள்ள கல்வி நிலை குறித்து நான் கவலையடைகின்றேன். தயவு செய்து எழுந்திருங்கள்” – இவ்வாறு ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.