கோலாலம்பூர் – முன்கட்டணம் (prepaid) செலுத்திப் பெறப்பட்ட கைத்தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் சலுகைகள் காத்திருக்கின்றன. ஜனவரி 1 ஆம் தேதி முதற்கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை, ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிக்கு இணையான தொகை அந்த முன்கட்டண அட்டைகளின் கணக்குகளில் நேரடியாக சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு மற்றும் பல்ஊடக பயனீட்டாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏறத்தாழ 33 மில்லியன் பேர் இந்த முன்கட்டண கைத்தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
உதாரணமாக, ஒரு பயனீட்டாளர் தனது முன்கட்டண அட்டையில் 10 ரிங்கிட் செலுத்தினால், உடனடியாக அவருடைய கணக்கில் 9.43 ரிங்கிட் மட்டுமே சேர்க்கப்படும் எஞ்சிய 57 காசு 6 சதவீத பொருள் சேவை வரியாக கழித்துக் கொள்ளப்படும்.
ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்த 57 காசுகள் மீண்டும் அந்த முன்கட்டண அட்டையின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வரவாக வைக்கப்படும். வசூலிக்கப்பட்ட பொருள்சேவை வரியானது, சுங்கத் துறையின் சட்டங்களுக்கு ஏற்ப சுங்க இலாகாவுக்கே சேர்ப்பிக்கப்படும்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் நஜிப் துன் ரசாக் கைத்தொலைபேசி முன்கட்டண அட்டைகளுக்கு, பொருள்சேவை வரிக்கு இணையான தொகை சலுகையாக திரும்ப வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.