சென்னை – மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தைச் சுற்றி குப்பைகள் பெருகி வருவதாக எழுந்த புகார்களை அடுத்து தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கலாம் நினைவிடத்தைச் சுற்றி தற்போது குப்பைகள் சூழ்ந்துள்ளதாகவும், மாடுகள் அங்கு அலைந்து திரிந்து அசுத்தம் செய்வதாகவும் கலாம் குடும்பத்தினர் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், தற்போது அந்நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கிய மத்திய அரசுக்கு தமிழக அரசு நன்றி கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏபிஜே.அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்வதற்காக தமிழக அரசால் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஜூலை 30-ம் தேதி கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது”
“கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட உள்ளதால், தேவையான நிலத்தை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.”
“இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலரும் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து 1.36 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.”
“அப்துல் கலாம் நினைவகம் அமைப்பது தொடர்பாக உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ம் தேதி நடந்தது. கூட்டத்தில் நிலம் ஒதுக்கிய முதல்வர் ஜெய லலிதாவுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நன்றி தெரிவித்தார்.”
“தற்போது தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் வேலி அமைக்க மத்திய பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.”
– இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.