சென்னை – நடிகர் சங்கக் கணக்கை ஒப்படைக்காவிட்டால் சரத்குமார், ராதாரவி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிந்தவுடன், பழைய நிர்வாகிகள், கணக்குகளை புதிய நிர்வாகத்தினரிடம் சட்டப்படி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள், சரத்குமார் ஊடகங்கள் மூலம் ‘நடிகர் சங்க கணக்குகள் 7 நாட்களிலும், அறக்கட்டளை கணக்குகள் 15 நாட்களிலும் ஒப்படைப்பேன்’ என்று அறிவித்தார்”
“நாங்கள் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆனால் கணக்குகள் வரவில்லை. பல நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் 25-ம் தேதி, நடிகர் சங்கத்தின் ஒரு வருட கணக்கு (2014-2015) மட்டும் வந்தது. ஆனால் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 6 மாத கணக்குகள் வரவில்லை.”
“அவர்கள் தந்த ஒரு வருட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அத்தோடு, அறக்கட்டளையைப் பொறுத்தவரை பல வருடங்களாக சரத்குமார், ராதாரவி இருவரும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். அறக்கட்டளைக்கு 2013-2014, 2014-2015 மற்றும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 6 மாதம் என இரண்டரை வருட கணக்குகள் தர வேண்டியுள்ளது.”
“முந்தைய வருட கணக்குகளை தணிக்கை செய்து பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற வேண்டியது பொதுக்குழுவின் நோக்கம். கணக்கை ஒப்படைத்த 21 நாளில் இருந்து பொதுக்குழுவை கூட்ட நடிகர் சங்கம் தயாராக இருக்கிறது.”
“இவர்களின் பொறுப்பற்ற செயலால் வருமான வரித்துறை, சேவை வரித்துறை போன்றவற்றில் நடிகர் சங்கமும், அறக்கட்டளையும் சட்டப்படி பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உறுப்பினர்கள் மற்றும் சங்க நலனுக்காக கூடிய விரைவில் இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பொதுக் குழுவிலும் நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் கார்த்தி, இதனை தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்த சரத்குமார், தங்களது தணிக்கையாளர் (Auditor) வெளிநாடு சென்று இருப்பதாகவும், அவர் வந்தவுடன் தேவையான கணக்கு வழக்குகளை சமர்பிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதனை எதிர் கொள்வதற்கும் தயார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.