துபாய் – புத்தாண்டு அன்று இரவு துபாயில் 63 மாடி நட்சத்திரத் தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் 20-வது மாடியின் வெளிப்புறத்தில் இருந்து தான் தங்கும்விடுதி முழுவதிலும் தீப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனிடையே, புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வானவேடிக்கைகளில் இருந்து தீப்பற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதனிடையே, 48 மாடியில் வானவேடிக்கைகளைப் படம் பிடிப்பதற்காக சென்ற பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர், தங்கும்விடுதி எங்கும் தீ பரவிய போது, சுமார் 30 நிமிடங்களுக்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் கட்டிடத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தது குறித்து பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்துள்ளார்.
மீட்புக்குழு வந்து தன்னை மீட்கும் வரை இன்னும் சில நிமிடங்களில் தான் இறந்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“இன்னும் ஒரு மணி நேரம் விட்டிருந்தால்.. அவ்வளவு தான் .. நான் இறந்திருப்பேன்” என்று அதிர்ச்சியில் உச்சத்தில் பேட்டியளித்துள்ளார்.
“30 நிமிடங்களுக்கு கட்டிடத்தின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.