Home Featured உலகம் விபத்திற்கு முந்தைய நாள் நேதாஜி எங்கு பயணம் செய்தார்? – முக்கிய ஆவணங்கள் வெளியாகின!

விபத்திற்கு முந்தைய நாள் நேதாஜி எங்கு பயணம் செய்தார்? – முக்கிய ஆவணங்கள் வெளியாகின!

513
0
SHARE
Ad

Netaji-லண்டன் – நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மறைவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் விமான விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் முந்தைய நாள் எங்கு இருந்தார்? எங்கு பயணம் செய்தார்? என்பது தொடர்பான முக்கிய ஆவணங்களை, இங்கிலாந்து இணையதளம் ஒன்றும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

நேதாஜியின் உறவினரும், அந்த இணையதளத்தை நடத்தி வருபவருமான ஆஷிஸ் ரே தான், தற்போது அந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆவணங்களில், “விமான விபத்திற்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூனுக்கு சென்றடைந்தார். அந்தப் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இரண்டாம் உலகப்போரில் தோற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. அதனால், நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை.”

#TamilSchoolmychoice

“இறுதியாக, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்பட்ட ஜெனரல் இசோடா, தைவான் வழியாக ஜப்பானுக்கு செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து, நேதாஜி தன்னுடன் பயணிப்பதற்கு இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானை தேர்ந்தெடுத்தார். இதனால் அவரின் மற்ற ஆலோசகர்களும், அதிகாரிகளும் உடன் செல்ல முடியவில்லை.”

“குறிப்பிட்ட அந்த விமானத்தில் மற்றொரு பிரச்சனை ஏற்பட்டது. விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாகக் கூறப்பட்டதால், நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச்சென்றார். கூடுதல் சுமையின் காரணமாக விமானம், ஓடுபாதை முழுவதும் ஓடிய பிறகுதான் மேலே எழுந்தது.”

“அதே விமானத்தில், ரஷ்ய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய இராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர், சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும், மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜி ஏற்றுக்கொண்டார்.”

“விமானம் புறப்படுவதற்கு தாமதமானதால், திட்ட மிட்டபடி தைவானுக்கு செல்லாமல், வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் தரையிறக்கப்பட்டது. அங்கு, விமானத்தின் சுமையை குறைக்க, எந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ எடையுள்ள பொருட்கள் கீழே இறக்கி வைக்கப்பட்டது. அன்றைய இரவில், நேதாஜி டூரன் நகரில் உள்ள மோரின் விடுதியில் தங்கினார்” என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களில் நேதாஜியின் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசு, இந்திய தேசிய இராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்கள் இடம்பெற்றுள்ளன.