பதன்கோட் – பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டை நீடித்து வரும் நிலையில், இன்று பதன்கோட் விமானத்தளத்தை பார்வையிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தீவிரவாதிகளிடம் அதிக ஆயுதங்கள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே விமானத் தளத்தை மீட்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்களிடம் அவர் அளித்துள்ள பேட்டியில், “இதுவரை 6 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை நாளையும் தொடரும். அதன்பிறகே, இது பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்க முடியும். ஒவ்வொரு தீவிரவாதியும், 40 முதல் 50 கிலோ அளவுக்கான வெடிபொருட்களுடன் ஊடுருவியிருந்தனர். இதனால்தான், எங்கள் திட்டத்தை முடிக்க 4 நாட்கள் ஆனது.”
“தீவிரவாத கும்பலுக்கு எதிராக கடுமையாகப் போராடி அவர்களை வீழ்த்திய பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்கள். பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்யவில்லை. எந்தெந்த பகுதிகள் வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற விவரத்தை, எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அரசு கேட்டுள்ளது. விமானத் தளத்திற்குள் அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும்”என்று அவர் தெரிவித்துள்ளார்.