கோலாலம்பூர் – ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணப் பெட்டிகளைக் கொண்டு செல்வதில், நேற்று இரவு முதல் தற்காலிகக் கட்டுபாடுகளை விதித்துள்ளது மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
அதாவது, பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மாஸ் விமானங்களில் இனி கைப்பைகளைத் தவிர மற்ற பெட்டிகளை எடுத்துச் செல்ல இயலாது என்று புரிந்து கொள்ளப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், “வழக்கத்திற்கு மாறான வலுவான காற்று” காரணமாக விமானத்தின் எரிபொருளை சேமிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
என்றாலும், தற்போது லண்டன் செல்லும் விமானத்தில் மட்டும் இந்தத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த முடிவு குறித்து மேல் விவரங்கள் வரும் வரை, சிக்கன வகுப்புப் பயணிகள் 7 கிலோ எடையும், முதல் வகுப்பு பயணிகள் இரண்டு பெட்டிகளில் மொத்தம் 14 கிலோ எடையும் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.