புது டெல்லி – இமயமலைப் பகுதியில் 8.2 புள்ளிகள் என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மட்டும் ஏற்பட்டால் இந்தியா, நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய நாடுகள் மிகப் பெரிய அழிவை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புவி அமைப்பின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, கடந்த சில வருடங்களாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு சிக்கிமில் ஏற்பட்ட 6.9 அளவிலான நிலநடுக்கம், 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 அளவிலான நிலநடுக்கம் மற்றும் அண்மையில் மணிப்பூரில் ஏற்பட்ட 6.7 அளவிலான நிலநடுக்கம் காரணமாக இமயமலை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை நிலநடுக்க கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக அடுத்து வரும் காலங்களில், இமயமலை சுற்றுவட்டாரப் பகுதிகள் மிகப் பெரிய பூகம்பங்களை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டால், இந்தியாவின் மலைப்பிரசே மாநிலங்கள், பீகார், உத்தர பிரதேசம், டில்லி, வடகிழக்கு மாநிலங்கள் மிகப் பெரிய சேதத்தை சந்திக்கும் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மலைப்பிரதேச மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை அனைத்துலக புவியியல் ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.