சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை வரும் 8-ம் நடைபெறாது என உச்ச நீதிமன்றப் பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை வரும் 8-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பான இறுதிப் பட்டியலை உச்ச நீதிமன்றப் பதிவுத்துறை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அதில், “உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு, வரும் 8-ம் தேதி விசாரிக்கப்பட மாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஓரிரு வாரங்களுக்கு பின் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற பதிவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.