கோலாலம்பூர் – மதமாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெற போராட்டம் நடத்திவரும் இந்திரா காந்தி, கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதன் வழி தனது போராட்டத்தைத் தொடரவுள்ளார்.
மலேசிய நீதித் துறையில் உச்ச நீதின்றம் என்பது பெடரல் கோர்ட் எனப்படும் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகவும், வழக்கறிஞர்கள் குழுவொன்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது என்றும் இந்திரா காந்தியின் வழக்கறிஞர் எம்.குலசேகரன் (படம்) தெரிவித்துள்ளார்.
கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு எதிராக இருந்தாலும், இந்திரா காந்திக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அம்சம், தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் இந்திரா காந்திக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளதுதான்.
சம்பந்தப்பட்ட மதம் மாற்றி அத்தாட்சி கடித ஆவணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல சீராய்வுக்கு உட்பட்டது என்ற அடிப்படையில் இந்திரா காந்தியின் மதம் மாற்றப்பட்ட செய்யப்பட்ட குழந்தை அவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதிபதி ஹாமிட் சுல்தான் தீர்ப்பளித்திருந்தார். மற்ற இரு நீதிபதிகளும், இந்திரா காந்தியின் விவகாரம் இஸ்லாம் மதம் சம்பந்தப்பட்டது என்பதால், இதனை ஷாரியா நீதிமன்றமே விசாரிக்க முடியும் எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
ஆனால் ஹாமிட் சுல்தானோ, 2004ஆம் பேராக் இஸ்லாமிய நிர்வாக சட்டப்படி மத மாற்றத்திற்கு அனுமதிக்கும் சட்டத்தை ஒரு பொது (சிவில்) நீதிமன்றம் விசாரிக்க முடியும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்தில் தனது அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடரவிருக்கும் இந்திரா காந்தியின் வழக்கின் முடிவை நாடும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர். காரணம் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவே இறுதியானதாகும்.
அதன்பின்னரே, இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சட்டத்திருத்தங்கள் ஏதும் செய்ய முன்வருமா என்பது தெரியவரும்.