கோலாலம்பூர் – “இந்தத் தருணத்தில், நீங்கள் உலகத் தொலைக்காட்சி நெட்வொர்கின் பிறப்பிற்குச் சாட்சியாக இருக்கிறீர்கள்” இது தான் நேற்று லாஸ் வேகாசில் நடைபெற்ற அனைத்துலக நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் கூறியது.
நேற்று முதல் மலேசியா உட்பட உலகம் முழுவதும் 130 நாடுகளுக்கும் மேலாக ‘நேரலை’ முறையில் வீடியோ ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பம் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது நெட்பிலிக்ஸ் நிறுவனம்.
மலேசியர்கள் தற்போது ஹவுஸ் ஆப் கார்ட்ஸ், அன்பிரேக்கபிள் கிம்மி சிமிட், டேர்டெவில், ஜெஸ்சிகா ஜோன்ஸ் மற்றும் நார்கோஸ் போன்ற மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை இதன் மூலம் கண்டுகளிக்கலாம்.
இதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் நெட்பிலிக்சின் அதிகாரப்பூர்வ தளமான https://www.netflix.com/in/ என்ற இணையதளத்திற்குச் சென்று அங்கு வேண்டிய விவரங்களை எழுதி பதிவு செய்ய வேண்டும்.
நெட்பிலிக்சின் மலேசியாவிற்கான மாதாந்திரக் கட்டண திட்டத்தின் படி, அடிப்படை நிகழ்ச்சிகளை 33 ரிங்கிட்டிலும், நடுத்தரப் பிரிவு நிகழ்ச்சிகளை 42 ரிங்கிட்டிலும், முதன்மை நிகழ்ச்சிகளை 51 ரிங்கிட்டிலும் கண்டு களிக்கலாம்.