நியூயார்க் – வட கொரியா சமீபத்தில், ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க, ஐநா. பாதுகாப்பு அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட உள்ளது.
வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை குறித்து விவாதிப்பதற்காக ஐநா. பாதுகாப்பு அமைப்புக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நியூ யார்க் நகரில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், வடகொரியாவின் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியாவின் செயல், ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் வரம்புகளை மீறும் செயல். உலக நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தக் கூடிய இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் இந்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.