கோலாலம்பூர் – மலேசியாவின் முதல் ஷரியா – இணக்கம் கொண்ட விமானமான ரயானி ஏர், இஸ்லாமை வைத்து லாபம் பார்ப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருப்பதை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சமர் லீ ஹாசிம் லீ கூறுகையில், எங்கள் நிறுவனம் தனது இயக்கங்களில் இஸ்லாம் கொள்கைகளை கடைப்பிடிக்க முயற்சி செய்கிறது, அதோடு, இஸ்லாமிய நாடான மலேசியாவிற்கு அது மிகவும் பொருந்துகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மலேசியர்கள் வேலை வாய்ப்பினைப் பெற ரயானி ஏர் உதவுகிறது என்றும் சமர் லீ குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனம் ஒரு இந்துவுக்குச் சொந்தமானதாக இருக்கலாம், ஆனால், தான் உட்பட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட 4 உயர் அதிகாரிகளைக் கொண்டு தான் அதன் இயக்கங்கள் செயல்படுவதாகவும் சமர் தெரிவித்துள்ளார்.
“துன்(மகாதீர்) அவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்வோம். வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நிறுவனமும் லாபத்தை ஈட்ட தான் விரும்பும். ஆமாம், நாங்களும் லாபம் ஈட்டுவதை விரும்புகின்றோம். ஆனால் இஸ்லாமை வைத்து லாபம் சம்பாதிக்கின்றோம் என்பது உண்மையல்ல” என்று பிஎன்பிபிசி.மை என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சமர் தெரிவித்துள்ளார்.