குவாந்தான் – இங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் விவகாரம் தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 3 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்பில் இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டதன் சந்தேகத்தின் பேரில் இவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் குவாந்தானில் தனித்தனியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் சட்டவிரோதமாகத் தோண்டியெடுக்கப்பட்ட பாக்சைட் தாதுவை மூன்றாம் தரப்பினருக்கு முறையான பத்திரங்கள் இல்லாமல் விற்பனை செய்வதற்கு உதவி புரிந்தார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.
பாக்சைட் விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளில் துணை புரிவதற்காக, இவர்கள் மூவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பாக்சைட் சுரங்கப் பணிகளின் காரணமாக, அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய சுங்க வரியில் ஏறத்தாழ 187 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு நேர்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளின் வழி தெரிய வந்துள்ளது.
இந்த சட்டவிரோத பாக்சைட் விவகாரத்தில், இலஞ்சம் பெற்றவர்கள், கொடுத்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வைத்திருக்கும் பொதுமக்கள் முன்வந்து, தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.