தூத்துக்குடி – அமெரிக்கக் கப்பலில் கடந்த 2013-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்தியக் கடலோர பகுதிக்குள் நுழைந்த 23 வெளிநாட்டவர் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்தியக் கடலோரப்படை மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் கடந்த 2013-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10-ம் தேதி, சீமன் கார்டு ஓகியோ என்ற அமெரிக்கக் கப்பலில் ஆயுதங்களுடன் இருந்த 35 பேரைக் கைது செய்தனர்.
அவர்கள் மீது ஆயுதப் படை கலன் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அதற்கு மதுரை உச்ச நீதிமன்றக் கிளை தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, கியூ பிரிவு காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த குற்றம் தொடர்பாக வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்கவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பில், கப்பலில் இருந்தவர்கள், அவர்களுக்கு டீசல் வழங்கி இந்திய மீனவர்கள் ஆகியோரின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக, அவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.