Home Featured நாடு “55 ஆண்டுகால அனுபவங்களின் வார்ப்புதான் எனது கதைகள்-ஒவ்வொன்றுக்கும் 4 மாதங்கள் செலவழித்தேன்” – வைரமுத்து உரை

“55 ஆண்டுகால அனுபவங்களின் வார்ப்புதான் எனது கதைகள்-ஒவ்வொன்றுக்கும் 4 மாதங்கள் செலவழித்தேன்” – வைரமுத்து உரை

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை ஜனவரி 9ஆம் தேதி தலைநகர் ராஜா லாவுட் சாலையில் உள்ள மாநகரசபை அரங்கத்தில் நடைபெற்ற ‘வைரமுத்துவின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழாவின் உச்ச கட்டமாய் அமைந்தது வைரமுத்துவின் ஏற்புரை.

ஏற்கனவே, குமுதம் வார இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, பல வகைகளிலும் சிறப்பான விமர்சனங்களைச் சந்தித்து வந்துள்ள வைரமுத்துவின் 40 சிறுகதைகள் ஏற்கனவே ஒரே நூலாக தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்நூலின் அறிமுகம்தான் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்றது.

Vairamuthu-short stories-launch-KLவைரமுத்துவுக்கு ஆளுயர மாலையை அணிவிக்கும் சுப்ரா-சரவணன். (இடமிருந்து – நயனம் ஆசிரியரும், ஆதி.குமணன் சகோதரருமான ஆதி.இராஜகுமாரன், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் டத்தோ ஜி.சங்கரன், டாக்டர் சுப்ரா,வைரமுத்து,சரவணன், பெ.ராஜேந்திரன், முதல் நூலை பெற்றுக் கொண்ட டத்தோ புருஷோத்தமன், தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்க முதன்மை செயல் அதிகாரி டத்தோ பி.சகாதேவன்..

#TamilSchoolmychoice

ஏறத்தாழ ஒரு மணி நேரம், வைரமுத்து ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்களை இங்கே செல்லியல் வாசகர்களுக்காக தொகுத்துத் தருகின்றோம்:

“மாலையல்ல மலை”

எனக்கு அணிவிக்கப்பட்ட ஆளுயர பிரம்மாண்டமான மாலை – அது மாலையல்ல மலை.

நான் உங்களைப் பார்த்துக் கேட்கின்றேன். இது என்ன நியாயம்? எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை நான்கு பேர் தூக்கி வந்தார்கள். அதை எனக்கு இருவர் (டாக்டர் சுப்ரமணியம் மற்றும் டத்தோ சரவணன்) அணிவித்தார்கள். ஆனால் நான் ஒருவன் மட்டும் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது  என்ன நியாயம்?

Vairamuthu-short story-book-cover-ஒருமுறை பேரறிஞர் அண்ணாவுக்கு இதே போன்று பெரிய மாலை அணிவிக்கப்பட்டது. அது பற்றிக் குறிப்பட்ட அண்ணா, “வழக்கமாக எனக்கு மாலையைக் கொண்டு வருவார்கள். நான் அணிந்து கொள்வேன். இங்கோ, மாலையைத் தூக்கி வந்தார்கள். நான் உள்ளே புகுந்து கொண்டேன்” என வேடிக்கையாகக் கூறினார்.

எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையில் உள்ள ஒவ்வொரு பூக்களிலும் மலேசியத் தமிழ்ச் சமூகமே இருக்கின்றது எனக் கருதுகின்றேன்.

எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் அதிகமாக எழுது என எனக்கு ஆணையிடுவது போல் அந்த மாலையைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுகின்றது.

படித்துப் பாராட்டிய அமைச்சருக்கு நன்றி

அமைச்சர் (சுப்ரமணியம்) அவர்களே! உங்களுக்கு நன்றி. நீங்கள் ஒப்புக்குப் பாராட்டாமல், எனது கதைகளைப் படித்துவிட்டு பாராட்டியிருக்கிறீர்கள்.

எந்த மேடைக்குச் சென்றாலும், அந்த நிகழ்ச்சிக்கு தகுந்தவாறு பேசுவதும், அந்த மேடைக்குரிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு பேசுவதும் அமைச்சர் சுப்ரமணியத்தின் வழக்கம் என எனக்குத் சொல்லப்பட்டிருந்தது. அதை நான் இங்கு பார்த்தேன். எனது நூலுக்கு இங்கே மேடையில் திறனாய்வு செய்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேராசிரியர் டாக்டர் ரெ.கார்த்திகேசு. மற்றொருவர் அமைச்சர் சுப்ரமணியம்.

Vairamuthu-short story -release - 1

நூலை அறிமுகம் செய்து முதல் நூலை  பெற்றுக் கொள்ளும் அடையாளமாக வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட பதாகை….

ரெ.கார்த்திகேசு

எனது நூலை ஆய்வு செய்த ரெ.கார்த்திகேசு ஆழ்ந்த படிப்பாளி. அவரை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கிருக்கும் திறமைகளுக்கு, அவர் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அவர் இந்நேரம் ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகியிருப்பார். அவர் இந்த மண்ணில் பிறந்திருக்கின்றார். அவரை நீங்கள் கொண்டாட வேண்டும் என மலேசிய எழுத்துலகப் படைப்பாளிகளைக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஏன் சிறுகதை எழுதினேன்?

என்னைப் பார்த்துப் பலரும் கேட்கின்றார்கள். கவிதை எழுதிக் கொண்டிருந்த நீ ஏன் சிறுகதைப் பக்கம் வந்தாய் என்று? இலக்கியத்தின் ஒரு கூறுதான் சிறுகதை. சிறுகதை கவிதைக்கு அந்நியமானதில்லை. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு சிறுகதை இருக்கின்றது. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் ஒரு கவிதை இருக்கின்றது.

Vairamuthu-garland-saravanan-short story book releaseடத்தோ சரவணனுக்கு மாலை அணிவிக்கும் வைரமுத்து….

இந்த சிறுகதைகளின் எண்ணிக்கை 40தான். ஆனால் எனது 55 ஆண்டுகால வாழ்க்கை இதனை எழுத என்னைத் தயார்ப்படுத்தியிருக்கின்றது.  40 கதைகளை நாற்பது வாரங்களாக எப்படித்தொடர்ந்து எழுதினீர்கள் என எல்லோரும் என்னைப் பார்த்துக் கேட்கின்றார்கள்.

எனது இந்த 40 கதைகளை எழுத காலம் என்னை 55 ஆண்டுகாலம் தயாரித்திருக்கின்றது.

நான் 7 வயது முதல் பார்த்த வானம், பூமி மனிதர்கள், பறவைகள், மலைகள், மனிதர்கள், வெற்றிகள், தோல்விகள், ஜனனம், மரணம், பித்தலாட்டங்கள் …இப்படியாக இவை எல்லாவற்றையும்விட நான் கண்ட மனித நேயம்…இவையெல்லாம் சேர்ந்துதான், எனது 61வது வயதில் என்னை இந்த சிறுகதைகளை எழுத வைத்திருக்கின்றது.

Vairamuthu-short story release-

மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்ட பிரமுகர்கள்…வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர் வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார்…

தமிழ்ச் சமூகமும் இதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த நூல் முதன் முதலாக வெளியீடு கண்டபோது முத்தமிழறிஞர் மு.கருணாநிதி வெளியிட கலைஞானி கமலஹாசன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். அப்போது நான் அடைந்த அதே ஆனந்தத்தை இன்றும் நான் இந்த மலேசிய மண்ணில் அடைந்தேன்.

வாழ்க்கையை இரசிப்பதற்குத் தேவை மனித நேயம்தான்…

புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு சென்றவர்களிடம் செல்லமாக ஒரு வேண்டுகோள். இது ஆயுத பூஜை அன்றும் மட்டும் புரட்ட வேண்டிய புத்தகம் அல்ல. வாங்கி வைத்துக் கொண்டு எப்போதோ அணிகின்ற வைரமோ, பட்டுப் புடவையோ அல்ல. நித்தம் கட்டவேண்டிய பருத்திப் புடவை. அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டிய நூல். இதில் வாழ்க்கை இருக்கின்றது. மனிதம் இருக்கின்றது. அமைச்சர் சொன்னது போல் சத்தியம் இருக்கின்றது. எல்லாத் தரப்பினரின் கதைகளும் இருக்கின்றது.

இதையெல்லாம் படித்துப் பார்த்தால் உங்களுக்கு ஒன்று புரியும் வாழ்க்கையை இரசிப்பதற்குத் தேவை மனிதநேசம்தான்.

நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் வாழ்க்கையையும் பார்த்தால் அவர்கள் ஒவ்வொருக்குள்ளும் ஒரு சிறுகதை இருப்பதைக் காணலாம்.

எனது இந்தக் கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாது. படித்துத் துய்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.

நான் தேனெடுக்கிறவன்தான். இருந்தாலும் அந்தத் தேன் எப்படியிருக்கின்றது என்பதை நாக்கில் தடவித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ்க் கலாச்சாரத்தின் உச்சம் எது?

vairamuthuதமிழ் கலாச்சாரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் போட்ட கோட்டை, தமிழ்ச் சமுதாயம் பெரும்பாலும் மதித்துக் கொண்டே வந்திருப்பதுதான் தமிழ்க் கலாச்சாரத்தின் உச்சம்.

ஜாதிப் பிரச்சனை பற்றியும் ஒரு சிறுகதை எனது தொகுப்பில் இருக்கின்றது. இந்த அளவுக்கு ஜாதி பிரச்சனை இருக்கிறதா என நீங்கள் நினைக்கலாம். ஜாதிக் கட்டுமானத்தைப் பொறுத்தவரை இந்தியாவில், தமிழ்நாட்டில் இன்னும் தளராமல் இருக்கின்றது. ஆனால், மலேசியர்கள் அதை வென்றிருக்கின்றீர்கள். நாங்கள் இன்னும் வெல்ல முடியவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவில் உள்ளவர்கள் மலேசியர்களைப் பின்பற்ற வேண்டும் என நான் துணிச்சலாகக் கூறுவேன்.

பெரியாரைப் பார்த்து ஒரு முறை கேட்டார்கள் – ஜாதி பெரிதா மதம் பெரிதா என்று! அதற்கு பெரியார் கூறினார் மதத்தை விட ஜாதிதான் பெரியது என்று.

அவரைக் கேள்வி கேட்டவர் மிரண்டு விட்டார். காரணம், மதம் சர்வதேச அமைப்பு, ஜாதி என்பதோ ஓர் உள்ளூர் கட்டமைப்பு. அதனால் எப்படி ஜாதியை விட மதம் பெரிதாக இருக்க முடியும்?

ஆனால், அதற்கு விளக்கமும் தந்தார் பெரியார். “மதத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஜாதியை நீங்கள் விரும்பினாலும் மாற்றிக் கொள்ள முடியாது” என்று சொன்னார் பெரியார்.

ஆய்வுகள் நிறைய செய்திருக்கின்றேன் – ஒவ்வொரு கதைக்கும் நான்கு மாதங்கள்….

இந்த சிறுகதைகளை எழுதுவதற்கு நான் நிறைய ஆய்வுகள் செய்திருக்கின்றேன். இதுவரை நான் சொல்லாத ஒன்றை சொல்கின்றேன் இது அறிவார்ந்த, ஆய்வாளர்கள் கூட்டம், என்னை நேசிக்கின்ற கூட்டம்  என்பதால் ஒன்றைச் சொல்லுகின்றேன்.

இந்த ஒவ்வொரு கதையையும் எழுதுவதற்கு நான் சுமார் நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டேன். எழுதி முடித்த பின் ஒவ்வொரு கதையையும் நான் செதுக்குவேன். எழுதுவது என்பது வேறு. செதுக்குவது என்பது வேறு.

ஒரே ஒரு விவரத்துக்காக நான் ஒரு மாதம் கூட காத்திருந்திருக்கின்றேன்.

தாஜ்மகால் – புதிய தகவல்கள்….

tajmahalதாஜ்மகாலைப் பற்றி எழுத வேண்டிய கதைக்காக மீண்டும் ஒருமுறை தாஜ்மகால் சென்று பார்த்து வந்தேன். அதைப் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கின்றேன்.

இப்போதுள்ள தாஜ்மகாலில் இருக்கும் மும்தாஜின் நல்லுடல் கூட அங்கு முதன் முதலாகப் புதைக்கப்பட்டதல்ல. ஏற்கனவே அவளது உடல் புதைக்கப்பட்டிருந்த சமாதியிலிருந்து தோண்டி எடுத்துவரப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட தாஜ்மகாலில் மீண்டும் புதைக்கப்பட்டது.

ஷாஜஹானுக்கு இன்னொரு ஆசையும் இருந்தது. தனக்காக ஒரு தாஜ்மகால் கட்டிக் கொள்ளவேண்டும் அது கறுப்பு நிறத்தில் இருக்கவேண்டும் அதாவது கறுப்பு நிறக் கற்களால் கட்டப்பட வேண்டும் என்ற ஆசைதான் அது. எனினும் அது நிறைவேறவில்லை. ஆனால் அதைக் கட்டியிருந்தால் அதற்கு ஷாஜ்மகால் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் என நான் எழுதியுள்ளேன். இது தாஜ்மகால் அது ஷாஜ்மகால் ஆக இருந்திருக்கும்.

ஏன் ஷாஜஹான் அதைக்கட்டவில்லை என்பதுதான் எனது கதை.

இப்படியாக பல புதிய தகவல்களை ஆய்வு செய்துதான், கற்பனைகளை கலந்துதான் எனது கதைகளை எழுதியிருக்கின்றேன். அந்தத் தாஜ்மகாலின்  சோகத்தை எனது கதையில் கூறிவிட்டு “துக்கத்தின் நிறம் கறுப்பு என்று யார் சொன்னது? வெள்ளையும்கூட!”  என முடித்திருக்கின்றேன்.

Vairamuthu-short story release-crowdவைரமுத்து சிறுகதைகள் நூல் அறிமுக விழாவில் திரளாகக் கலந்து கொண்டவர்கள்….

சிறுகதைகளில் சொற்சிக்கனம்…

நான் கவிதை எழுதி கையாண்டு சிறுகதைகளுக்குள் புகுந்தவன் என்பதால், நான் மொழியில் தங்கக் காசுகள் போல் சொற்சிக்கனத்தைக் கையாண்டிருக்கின்றேன்.

தமிழில் பல சிறந்த அறிஞர்கள் சிறுகதைகள் எழுதியிருக்கின்றார்கள். இங்கு மலேசியாவிலும் நிறைய எழுதியிருக்கின்றார்கள். அவர்களை விட நான் சிறந்த மேம்பட்ட கதைகளை எழுதியதாகவோ, உயர்ந்த கதைகளை எழுதியதாகவோ நான் கூறிக் கொள்ள மாட்டேன். அவர்களை விட வேறுபட்ட, மாறுபட்ட மொழியில், நடையில் எழுதியிருக்கின்றேன் என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்வேன். யாரையும் நகலெடுக்காதது எனது கதைகள் எனக் கூறிக் கொள்வேன்.

ஒரு கவிஞனால் படைக்கப்பட்ட தமிழ்ச் சிற்பம் என்று கூறுங்கள் – நான் ஏற்றுக் கொள்வேன்.

மொழியை செதுக்கி செதுக்கி இந்தக் கதைகளை எழுதியுள்ளேன்.

தொகுப்பு: இரா.முத்தரசன்